அஸ்மின்: ஐஜிபி, அம்னோவின் கையாளா நீங்கள்?

axபெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  ஒரு  வேட்பாளர்  அல்லர். ஆனால், நேற்று  அங்கு  பிகேஆர்  செராமா ஒன்றில்  அவரைப்  பற்றித்தான்  முழுக்க  முழுக்க  பேசப்பட்டது.

200  பேர்  கலந்துகொண்ட  கூட்டத்தில்  பேசிய  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி, அந்நிகழ்வில்  சிறப்புப்  பிரிவு (எஸ்பி) அதிகாரிகள்  இருக்கிறார்களா  என்று  வினவினார்.

கூட்டத்தினர்  “இருக்கிறார்கள்”  என உரக்கக்  கூறினர்.

“எஸ்பி-களே முன்னுக்கு  வாருங்கள். உங்கள் தலைவரைக்  கேளுங்கள்,  அவர்  ஐஜிபி  ஆக இருக்க  விரும்புகிறாரா  பிஎன்  அல்லது  அம்னோவின்  கையாளாக  இருக்கப்   போகிறாரா  என்று”.  சிலாங்கூர்  மந்திரி  புசார்  இவ்வாறு  கூறியதைக்  கூட்டத்தினர்  ஆரவாரத்துடன்  வரவேற்றனர்.

“பெர்மாத்தாங்  பாவ் மக்களைக்  கேட்கிறேன், இப்போதுள்ள  ஐஜிபி  நாட்டின்  பாதுகாப்பைக்  கவனிக்கிறாரா  அல்லது  அம்னோ, பிஎன்னின்  பாதுகாப்பைக்  கவனிக்கிறாரா? உடனே சொல்லுங்கள்”, என்று  அஸ்மின்  கோரினர்.

“அம்னோ”  என்று  கூட்டத்தினர்  சத்தமிட்டனர்.

“பிரமாதம். பாராட்டுகள்”, என்றார்  அஸ்மின்.

வெள்ளிக்கிழமை,  மே  தினப்  பேரணியில்  கலந்துகொண்ட  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  உள்பட  எதிரணித்  தலைவர்களும்  சமூக  ஆர்வலர்களுமாக  சுமார்  30 பேரைக்  கைது  செய்து  தடுத்து வைத்திருந்த  போலீசார்மீது  அஸ்மின்  ஆத்திரம்  கொண்டிருந்தது  தெளிவாகவே  தெரிந்தது.

அவர்களை போலீசார்  பல  மணி  நேரம்  தடுத்து  வைத்தது  தேவைதானா  என்றவர் வினவினார்.

“அது  நியாயமா, கொடுமையா?”, என்றவர்  வினவியதற்கு “கொடுமை”  என்று  கூட்டத்தினர்  பதிலளித்தனர்.

“இது  எல்லைமீறிய  நடவடிக்கை. ஐஜிபி  அவரின்  சகோதரரைத்  தடுத்து  வைத்தாரா?”-இது  அஸ்மின்.

“இல்லை”- இது  கூட்டத்தினர்.