பாலியல் படங்கள் வைத்திருந்த குற்றவாளிக்கு இரண்டாவது வாய்ப்பா?

fahmi1சிறுவர்  பாலியல் படங்களை  வைத்திருந்த குற்றத்துக்காக  தண்டிக்கப்பட்ட  மலேசிய  மாணவருக்கு மாரா  இரண்டாவது வாய்ப்பு  வழங்குவதைச்  சுட்டிக்காட்டிய  முன்னாள்  மாணவர்  தலைவர்  ஒருவர், அது அரசாங்கத்தின்  பாரபட்ச  போக்குக்குத்  தெளிவான  சான்றாகும்  என்றார்.

“சிறுவர்  பாலியல் படங்கள்  வைத்திருந்தவருக்கு  இரண்டாவது  வாய்ப்பு  வழங்கப்படுகிறது. (ஆனால்) ஜனநாயகத்துக்குக்  கோரிக்கை  விடும்  மாணவர்கள்  இடைநீக்கம்  செய்யப்படுகிறார்கள்”, என  யுனிவர்சிடி  மலாயா(யுஎம்)  மாணவர்  சங்க  முன்னாள்  தலைவர்  பாஹ்மி  சைனல் கூறினார்..

லண்டனில்,  சிறுவர்  பாலியல்  படங்கள், காணொளிகளை  வைத்திருந்ததற்காக  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட  23-வயது  மாணவர்  நூர் பிட்ரி  அஸ்மீர்  நூர்டின்  தண்டனைக்  காலம்  முடிந்ததும்  மலேசியாவில் கல்வியைத்  தொடர  வாய்ப்பு  வழங்கப்படும்  என்று  மாரா  நேற்று  அறிக்கை  வெளியிட்டிருப்பது  பற்றி  பாஹ்மி  கருத்துரைத்தார்.

லண்டன்  இம்பீரியல்  கல்லூரி  மாணவரான  நூர் பிட்ரி  30,000  சிறுவர்  பாலியல்  படங்களையும்  காணொளிகளையும்  வைத்திருந்ததற்காக  பிரிட்டிஷ்  போலீசாரால்  கைது  செய்யப்பட்டார்.

அதை  அடுத்து  மாராவும்  அவருக்குக்  கொடுத்துவந்த  உதவிச்  சம்பளத்தையும்  இரத்துச்  செய்தது.

அன்வார்  இப்ராகிம்  பங்கேற்ற  நிகழ்வு  ஒன்றை  ஏற்பாடு  செய்ததற்காக யுஎம்-மிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டவரான  பாஹ்மி,  அரசாங்கம்  அதனை  எதிர்ப்பர்களைத்  தண்டிப்பதில் மட்டுமே  அக்கறை  கொண்டிருக்கிறது  என்றார்.

“அரசாங்கம்  அதன்  அதிகாரத்துக்கு  மிரட்டலாக  அமையும்  குற்றங்களுக்கு  எதிராக மட்டுமே  கண்டிப்பைக்  காட்டுகிறது. இது  அரசாங்கத்திடம் முதிர்ச்சி  இல்லை  என்பதையும்  அது  சிறுபிள்ளைத்தனமாக  நடந்துகொள்வதையும்தான்  காண்பிக்கிறது”, என்றாரவர்.