நாட்டில் பல விவகாரங்கள் அரசியலாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் இட்ரிஸ், கால்பந்தாட்டத்துக்கும் அந்நிலை நேர்ந்து விடுமோ என அஞ்சுகிறார்.
அவ்வாறு நேராமல் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின்தான் பாதுகாக்க வேண்டும். அதற்கு அமைச்சர் எது சரியோ அதைத்தான் தற்காக்க வேண்டும்.
முகநூலில் தம் கருத்துகளைப் பதிவிட்டுள்ள பட்டத்திளவரசர், மே 27-இல் தேசியக் குழுவுக்கும் டோட்டென்ஹெம் ஹோட்ஸ்பர்ஸுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கால்பந்தாட்டத்தை கைரி தற்காத்துப் பேசியிருப்பதால் அதிருப்தி அடைந்துள்ளார்.
“இந்த ஆட்டத்தால் தேசியக் குழுவுக்கு எந்த நன்மையுமில்லை. நீங்கள் நன்மை உண்டு என்று சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
“ஆட்டத்தினால் கிடைக்கும் இலாபம் ஏற்பாட்டாளர்களுக்கும் (ஃஎப்ஏஎம்(மலேசிய கால்பந்து சங்கம்)-முக்கும் போகும். அதுதான் ஒரே நன்மை.
“இது தேசியக் குழு தன்னை உலகக் கிண்ணத் தகுதி ஆட்டத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள உதவுமா?”, என்றவர் வினவினார்.
உலகளவில் தரவரிசையில் பின்தங்கிக் கிடக்கும் மலேசியக் குழுவுக்கு இந்த ஆட்டம் உதவப்போவதில்லை. உள்ளூர் ஆட்டக்காரர்களுக்கு இது ஒரு பயிற்சியாக அமையும் என்றும் சொல்வதற்கில்லை. எனென்றால் வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் ஐவர் ஆடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
“நாம் ஃபீஃபா ஆட்டங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவைதாம் நம் அடைவுநிலைக்கும் தரவரிசை உயரவும் உதவும்”என்றவர் சொன்னார்.
இளவரசருக்குத் தெரிந்தது கூட முதுமைமைச்சருக்குத் தெரியவில்லையே!