மகாதிரிடம் நஜிப் கூறுகிறார்: நான் உதவினேன், இப்போது நீங்கள் உதவுங்கள்

 

mandnhelpமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் தாக்குதல்கள் பற்றி இதுநாள் வரையில் மௌனமாக இருந்த வந்த பிரதமர் நஜிப் முதல் முறையாகத் திருப்பித் தாக்க முனைந்துள்ளார். தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை, பதவி விலகப் போவதில்லை என்று அவர் சூளுரைத்தார்.

1987 ஆம் ஆண்டில், மகாதிர் கிட்டத்தட்ட அம்னோ தலைவர் பதவியை இழக்கும் தருவாயில் இருந்த போது தாம் அவருக்கு உறுதியான ஆதரவு அளித்ததைச் சுட்டிக் காட்டிய நஜிப், அவர் இப்போது தமக்கு உதவ வேண்டும் என்றார்.

மகாதிரால் அதனைச் செய்ய இயலாது என்றால், அவர் கூச்சல் போடக் கூடாது என்று நஜிப் மேலும் கூறினார்.

 

1987 ஆம் ஆண்டில், அவரை ஆதரித்தவர்களில் தாமும் ஒருவர் என்று கூறிய நஜிப், “அவர் ஆபத்தில் இருந்த போது, அவர் தொடர்ந்து இருக்க நாங்கள் ஆதரவு அளித்தோம். இக்கட்டான நிலையில் நமது தலைவர் இருக்கையில் நாம் அவருக்கு உதவாமல் இருந்திருந்தால், அவர் (மகாதிர்) 22 ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்திருக்க முடியாது”, என்றார்.

“ஆகவே, மறந்து விடாதீர். அவர் (மகாதிர்) பிரதமரான போது நாங்கள் அவருக்கு முழு ஆதரவு அளித்தோம். இப்போது அவர் பிரதமராக இல்லாத வேளையில், மாற்றாக எங்களை ஆதரிக்க வேண்டும்”, என்று சபாவில் 40,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் நஜிப் கூறினார்.