சிதறியது டிஎச் கண்ணாடிக் கதவு: காட்டுத் தீயாய்ப் பரவியது வதந்தி

perlisபெர்லிஸ், கங்காரில்  தாபோங்  ஹாஜி   கிளை  அலுவலகத்தின்  கண்ணாடிக்  கதவு  சிதறியதுதான்  தாமதம்  பல்வகை  ஊகங்கள்  சமூக  வலைத்தளங்களில்  பரவின. ஆத்திரம்  கொண்ட சந்தாதாரர்கள்தான்  கல்லெறிந்து  கண்னாடிக்  கதவை  உடைத்திருப்பார்கள்  என்று  பலரும்  கருத்துத்  தெரிவித்திருந்தனர்.

உடைந்த கண்ணாடிக்  கதவின்  நிழற்படம் டிவிட்டரில்  பதிவிடப்பட்டிருந்தது. அதனடியில் ஹாபிஸ்  அஷ்ரப் என்பார்,  “மக்களின்  அடக்க முடியாத  ஆத்திரத்தின்  விளைவு. பெர்லிஸ், கங்கார்  தாபோங்  ஹாஜி-யைக்  குறிவைத்து  கல்லெறியப்பட்டிருக்கிறது”, என்று கருத்தைப் பதிவிட்டிருந்தார்.

இன்னொருவர்  அரிப்  அய்  அஹமட், “தாபோங்  ஹாஜிமீது  ஜமரா  கல்லெறிந்தது (ஹஜ்ஜுப்  பயணத்தில் செய்யப்படுவது) யார்?”, என்று  கேட்டிருந்தார்.

ஆனால், போலீஸ் படைத்  தலைவர்  செயலகத்தின்  உதவித்  தலைவர்  அஸ்மாவதி  அஹ்மட்,  கண்ணாடிக்  கதவு  உடைந்ததில்  சூதோ,  சதியோ  இல்லை  என்று  தெரிவித்துள்ளார்.

“கதவை  மூடியபோது கண்ணாடி உடைந்து விட்டது- அவ்வளவுதான்”, என்றார்.

இச்சம்பவம்  தொடர்பில்  வீண்  வதந்திகளைப்  பரப்ப  வேண்டாம்  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.