சிஎம் பதவி தவணைக் காலம்: அம்னோ தீர்மானத்துக்கு டிஏபி பிரதிநிதி ஆதரவு

penangபினாங்கில் முதலமைச்சர்  பதவி  இரண்டு  தவணைகளுக்கு  மட்டுமே என்று வரையறுக்கும் தீர்மானம்  கொண்டுவரும்  எதிரணி திட்டத்தை  டிஏபி  பிரதிநிதி  ஒருவர்  ஆதரிக்கிறார்.

2008-இலிருந்து  முதலமைச்சராக  இருக்கும்  லிம்  குவான்  எங்குக்கு  இது  இரண்டாவது  தவணையாகும். இரண்டாவது தவணை  முடியும்போது  அவர்  பதவியிலிருந்து விலக  வேண்டும்  என  அம்னோ  விரும்புகிறது.

அதற்கான  தீர்மானத்தை மாநில  எதிரணித்  தலைவர் ஸஹாரா ஹமிட் (பிஎன் -தெலோக்  ஆயர்  தாவார்) கொண்டுவரும்போது  அதை  ஆதரிக்கப்போவதாக  தே ஈ சியு(டிஏபி- தஞ்சோங்  பூங்கா)  கூறினார்.

இந்த  விவகாரம்  பற்றி  ஏற்கனவே  மாநில  சட்ட மன்றத்தில்  பேசியிருப்பதாக  தே  தெரிவித்தார்.

அத்தீர்மானத்தை  அவைத்  தலைவர் நிராகரித்து  விட்டதாக  ஸஹாரா கூறினார்.

“அதன்மீது  ஒரு  குழு  அமைக்கப்பட்டு  முதலில்  அங்கு  விவாதிக்க  வேண்டும்  என்று  எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”, என்றாரவர்.

அதை  ஸஹாரா  ஏற்கவில்லை. பல  துறைகளில்  முன்னோடி  என்று தம்பட்டமடித்துக்  கொள்ளும் மாநிலம்  என்பதால் பினாங்கு  சட்டமன்றம்  அத்தீர்மானத்தை  விவாதிப்பதுதான்  முறையாகும்  என்றாரவர்.

தே  அத்தீர்மானத்தை  ஆதரிப்பதை  அவரின்  சகாக்கள்  விரும்பவில்லை.

ஆயர்  ஹித்தாம்  சட்டமன்ற  உறுப்பினர்  வொங்  ஹொன்  ஹாய்,  அமெரிக்காவில்  மட்டுமே அதிபர்  பதவிக்கு  இரண்டு  தவணைக் காலம்  என்ற  வரையறை உண்டு  என்றார்.

பிரிட்டனில்  பிரதமர்  பதவிக்கு  அப்படிப்பட்ட  வரைமுறை  கிடையாது.

“ஏனென்றால், பதவியேற்ற  இரண்டாவது  நாளிலேயே  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டு  பிரதமரைப்  பதவி  இறக்க  முடியும்”, என்று  லிம்மின்  அரசியல்  செயலாளருமான  வொங்  கூறினார்.