அம்னோ தலைவர்: பிரதமரை ஆதரிக்கிறோம் ஆனால் அவர் 1எம்டிபி-யைச் சீர்படுத்த வேண்டும்

tajudinஅம்னோ  தலைவர்  ஒருவர்,  கட்சியின் உச்ச மன்றம் நேற்றைய  கூட்டத்தில்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்  குறித்தும் தாபோங்  ஹாஜி 1எம்டிபி-இடம்  நிலம்  வாங்கியதன்  தொடர்பிலும்  தன் கவலையை  வெளிப்படுத்தியது  எனக்  கூறினார்.

“நாங்கள்  பிரதமரை  ஆதரிக்கிறோம்.  அதே நேரத்தில்  அவர்  1எம்டிபி  பிரச்னைகளுக்குத்  தீர்வு  காண  வேண்டும்  என்றும் விரும்புகிறோம்”, என  தாஜுடின்  அப்துல்  ரஹ்மான்  தெரிவித்தார்.

“தலைவரிடம்   எங்கள்  கருத்துகளைத்  தெரிவித்தோம். 1எம்டிபி-க்காக பொதுப்  பணத்தைப்  பயன்படுத்தக்  கூடாது  என்பதையும் வலியுறுத்தினோம்.

“எங்களில்  பெரும்பாலோருக்கு   தாபோங்  ஹாஜி (1எம்டிபி-இடமிருந்து) நிலம் வாங்கியதில்  உடன்பாடு  இல்லை. அதனால்  அரசாங்கத்துக்கும்  யாத்திரிகர்  நிதிக்கும்  கெட்ட  பெயர் வந்து  விடலாம்.

“தாபோங்  ஹாஜி  நிலத்தை  விற்றுவிட  முடிவு  செய்திருப்பதால்  அந்தப் பிரச்னை  தீர்ந்தது”, என  தாஜுடின்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கூட்டத்தில்  காரசாரம்  எதுவும்  இல்லை. எல்லாமே  சுமுகமாகவே  பேசி  முடிக்கப்பட்டது  என்றாரவர்.