எம்பி: 1எம்டிபி-இன் மெளனம் நிலைமையை மோசமாக்குகிறது

arul1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  அது  வங்கிகளிடம்  வாங்கிய யுஎஸ்டி975 மில்லியனை(ரிம3.5 பில்லியன்)த்  திருப்பிச்  செலுத்துவதில்  பிரச்னைகளை  எதிர்நோக்குவதாகக்  கூறப்பட்டிருப்பதைக்  கேட்டுக்கொண்டு பதிலுக்கு  எதுவும்  சொல்லாமருப்பதற்காகக்  குறைகூறப்பட்டிருக்கிறது.

1எம்டிபி  தலைமை  செயல் அதிகாரி  அருள் கந்தா  கந்தசாமி, “பொருளக இரகசியக்காப்பு  என்ற  பாவாடைக்குள் ஒளிந்துகொண்டு” பதில்  சொல்லும்  பொறுப்பைத்  தவிர்த்து  வருகிறார்  என பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா  கூறினார்.

“மலேசியர்கள் அருளிடம்  கடன்  ஒப்பந்தத்தைக் காண்பிக்கச்  சொல்லவில்லை.

“1எம்டிபி- யால்  வங்கிகளின்  கடன்களை   உரிய  நேரத்தில்  திருப்பிச்  செலுத்த  முடியுமா  என்பதைத்  தெரிந்துகொள்ள  மலேசியர்கள்  ஆர்வமாக  இருக்கிறார்கள்.

“கடனைத்  திருப்பிச்  செலுத்தும் ஆற்றல் தனக்குண்டு  என்பதை  1எம்டிபி  நிரூபிக்குமானால் அது  மிகுந்த  நிம்மதியைத்  தரும்.  ஏனென்றால்,   இதற்குமுன், உள்ளூரில் ரிம2 பில்லியன்  கடனைத் தீர்ப்பதற்கு   தனியார்  முதலீட்டாளர்  குழுவொன்றை  ஏற்பாடு  செய்ய  கோடீஸ்வரர்  ஆனந்தகிருஷ்ணன்  தயவை  நாட  வேண்டியிருந்தது”, என  டோனி  புவா  ஓர்  அறிக்கையில் கூறினார்.

டொயிட்ச் பேங்க் தலைமையில்  அமைந்த  வங்கிகளின்  குழுமத்துக்குக் கொடுக்க  வேண்டிய  கடனைத்  திருப்பிச்  செலுத்தும் 1எம்டிபி-இன்  ஆற்றல்மீது  சந்தேகம்  ஏற்படுமானால் அதன்  விளைவு  மோசமாக  இருக்கும். 1எம்டிபி-க்குக்  கடன்  கொடுத்த  மற்றவர்களும்  கவலை  கொள்ளத்  தொடங்கி  விடுவார்கள். . 1எம்டிபி-இன்  மொத்த  கடன்  ரிம42 பில்லியன்.