எம்ஏசிசி-இன் ஊழல் எதிர்ப்பு: பாக் லா காலத்தில் நடந்தது நினைவுக்கு வருகிறது

swakசரவாக்  பிகேஆர் தலைவர்  ஒருவர், அம்மாநிலத்தில்  சட்டவிரோதமாக மரங்கள்  வெட்டப்படுவதற்கு  எதிராக மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  தொடங்கியுள்ள ‘ஒப்ஸ்  கெர்காஜி’ இயக்கம் அப்துல்லா அஹ்மட்  படாவி பிரதமராக  இருந்த  காலத்தில்  நடந்த  சம்பவத்தை  நினைவுப்படுத்துவதாக  கூறினார்.

கைச்சுத்தமானவர்  என்று கருதப்பட்ட  பாக்  லா  எனச்  செல்லமாக  அழைக்கப்பட்ட  அப்துல்லா, 2003-இல்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டிடமிருந்து  ஆட்சிப் பொறுப்பை  ஏற்றதும் ஊழலை  எதிர்க்கப்  போவதாக  வாக்குறுதி  அளித்தார்.

மக்கள்  நிறையவே  எதிர்பார்த்தனர்.  ஆனால், அது  நடக்கவில்லை  என்கிறார் சர்வாக்  பிகேஆர்  தகவல்  தலைவர்  வெர்னோன்  அஜி  கெடிட்.

“11-வது  பொதுத்  தேர்தலுக்குமுன் சிலர்  விசாரிக்கப்பட்டனர். கடைசி  கடைசியாக  மலேசியா  சரியான திசைநோக்கிச்  செல்லத்  தொடங்கி விட்டது  மகிழ்ச்சியால்  மலேசியாவே  பூரித்து  நின்றது.

“அவருக்கு  மிகப்  பெரிய  வெற்றி  கிடைத்ததும்  விசாரணைகளில் எந்தத்  தவறும்  செய்யப்பட்டிருப்பதாக  தெரியவில்லை  என்று  அறிவிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போதைய  சரவாக்  நிலவரம்  அதைத்தான்  எனக்கு  நினைவுப்படுத்துகிறது”, என்றார்.

“இது, மக்களின்  உண்மையான  வாழ்க்கைப்  பிரச்னைகளிலிருந்து  கவனத்தைத்  திசைதிருப்பும்  பிஎன்னின் மற்றொரு  கண்துடைப்பு  வேலையா?”. மலேசியாகினியிடம்  பேசியபோது  வெர்னோன் இவ்வாறு  வினவினார்.