நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டலாக அமையும் என்பதால் பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரிகளும் சட்ட விரோதமான பேரணிகளில் பங்கேற்கக் கூடாது என்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், இன்று ஆலோசனை கூறினார்.
யுனிவர்சிட்டி துன் ஹுசேன் ஓன் மலேசியாவின் (யுடிஎச்எம்) வேந்தரான சுல்தான் இப்ராகிம் அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாறாக கல்வி கற்பதற்கு தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கு அவர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
“அவ்வாறான நடவடிக்கைகளில் நமது மாணவர்கள் பங்கேற்பார்களென்றால், நான் யுடிஎச்எம் வேந்தர் பதவியை விட்டு விலகத் தயங்க மாட்டேன் ஏனென்றால் என் பெயருக்கு இழுக்கும் பல்கலைக்கழகத்தின் புகழுக்கு அவமானமும் ஏற்படுவதைவிட அது மேலானது”, என்று அவர் இன்று பத்து பஹாட்டில் நடந்த அப்பல்கலைக்கழகத்தின் 11 ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது கூறினார்.