அஹ்மட் மஸ்லான்: வியாபாரிகளைக் குறை சொல்லுங்கள், ஜிஎஸ்டி-யை அல்ல

blameபொருள்  விலைகள்  உயர்வாக  இருந்தால்  அதற்குக்  காரணம்  வணிகர்களே, பொருள், சேவை  வரி  அல்ல  என்று  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெரும்பாலான  பொருள்களுக்கு,  முன்பு  10 விழுக்காடு  விற்பனை, சேவை  வரி  விதிக்கப்பட்ட  இடத்தில்  இப்போது ஜிஎஸ்டி 6 விழுக்காடுதான்  விதிக்கப்படுகிறது என்றாரவர்.

“பொருள்  விலைகள்  குறையவில்லை  என்றால்  வணிகர்களைக்  குறை  சொல்லுங்கள், ஜிஎஸ்டி-யைக் குறை  சொல்லாதீர்கள்”, என்றாரவர்.

நாடாளுமன்றத்தில்  ஷம்சுல்  அனுவார்  நசரா( பிஎன் -லெங்கோங்)-வின்  கேள்விக்குப்  பதில்  அளித்தபோது  அஹ்மட்  இவ்வாறு  கூறினார்.

அவரது  பதிலில்  அப்துல்  காபுர்  சாலே(பிஎன் – கலாபலாகான்)-க்குத்  திருப்தி  இல்லை. ஜிஎஸ்டி  மக்களுக்குச்  சுமையாக  இருப்பதாய்க்  கூறினார்.

“சோதோவுக்குக்கூட  ஜிஎஸ்டி  சேர்க்கப்படுகிறது. எங்கு  போய்  சொல்லுவது? சுங்கத்  துறையிலா?”, என  காபுர் வினவினார்.

இந்தோனேசிய  உணவுவகையான  சோதோ  செய்வதற்குத்  தேவைப்படும்   பொருள்களுக்கு  ஜிஎஸ்டி  விதிக்கப்படுவதில்லையே  என  அஹ்மட்  கூறினார்.

ஜிஎஸ்டி  மூலம்  கொள்ளை  இலாபம்  அடிப்பது  பற்றிப்  புகார்  செய்ய  தனிச்  சாவடிகள்  அமைப்பது  பற்றி  ஆராயப்படும்  என்றார்.

விலைகள்  நிலைப்பட  தொடங்கியதும் ஜிஎஸ்டி  ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறும்  என்று  அஹ்மட்  சொன்னார்.

“(கொள்ளை  இலாபம்  அடிப்போரை) பிடித்து  சிறையில்  போட்டால்  விலைகள்  நிலைப்படும்”, என்றார்.