பிஎன்னுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் எண்ணம் அன்வார் இப்ராகிமுக்கு இருந்ததாகக் கூறப்படுவதை பிகேஆர் வன்மையாக மறுக்கிறது.
அன்வார் அதற்கு ஒப்புக்கொண்டிருந்ததாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி நேற்று கூறியிருப்பதை பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி மறுத்தார்.
“அன்வாருக்கோ அல்லது வேறு எந்தத் தலைவருக்கோ பிஎன்னுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் எண்ணம் இருந்ததில்லை என்பதைச் சொல்ல கட்சியின் அரசியல் பிரிவு எனக்கு அதிகாரம் அளித்துள்ளது”, என்றாரவர்.
பாஸ் அதன் உள்விவகாரங்களில் பிகேஆரை இழுக்க வேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் மக்களைப் பாதுகாக்க விரும்புகிறது என்று கூறிய ரபிஸி, பொருள், சேவை வரி, 1எம்டிபி விவகாரம் போன்றவற்றால் மக்கள் தொல்லைப்படுகிறார்கள் என்றார்.
“அம்னோ மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. மக்களிடம் மாற்றத்தைக் கொண்டுவர இதுவே சிறந்த தருணம்”, என்றாரவர்.