‘11 வது திட்டத்தை யார் நினைக்கப் போகிறார்கள்; அம்னோ போர் வெடித்து விட்டது’

warஅம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அணிக்கும்  துணைப்  பிரதமர் முகைதின் யாசின்  அணிக்குமிடையில்  நிகழ்ந்துவந்த  பனிப்  போர்  இப்போது  வெளிப்படையான  போராக  வெடித்திருக்கிறது  என்று கூறும்  டிஏபி  பெருந்தலைவர்  லிம்  கிட்  சியாங், அதை  இனியும்  மூடிமறைக்க  முடியாது  என்கிறார்.

அடிநிலை உறுப்பினர்கள்  அணி  பிரிந்து  நின்று இரு  தலைவர்களையும்  சாடத்  தொடங்கி  விட்டார்கள். நாட்டின்  மிகப்  பெரிய  கட்சிக்குள்  அதிகாரப்  போர்  விரைவாக பரவி  வருகிறது.

ஆகக்  கடைசியாக,  அம்னோ  செராஸ்  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹப்ஷி,  1எம்டிபி  இயக்குனர் வாரிய  உறுப்பினர்களைப்  பணிநீக்கம்  செய்ய  வேண்டுமென்ற  முகைதினின்  கோரிக்கைக்கு  ஆதரவு  தெரிவித்துள்ளார்.   அதேவேளை  சிறப்பு  விவகாரத்  துறை (ஜாசா) தலைமை  இயக்குனர் முகம்மட்  புவாட்  ஸர்காஷி,  முகைதின்  கல்வி  அமைச்சுப்  பொறுப்புகளை  நிறைவேற்றுவதில்  சோம்பேறித்தனம்  காட்டுகிறார்  என்று  சாடியுள்ளார்.

“நஜிப்  ‘பச்சை  விளக்கு காண்பிக்காமலா’  புவாட்  முகைதினை  இப்படி  அப்பட்டமாகச்  சாடுவார்?”, என்று  லிம்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

“அம்னோவில்  அரசியல்  அதிகாரப் போர்  ஆழமாக வேரோடும் வேளையில்  11வது  மலேசியத்  திட்டத்தைப்  பற்றி  யார்  நினைக்கப்  போகிறார்கள்?”, என்றாரவர்.