சபாவில் அரசாங்க நிதி உதவி பெறும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கிழிந்த மெத்தைகளில் தூங்க வேண்டியுள்ளது. வெளியில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய்களில் குளிக்க வேண்டியுள்ளது.
அந்தப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கிய போதிலும் அந்த சூழ்நிலை காணப்படுகிறது.
2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அந்த விவரங்கள் கூறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தங்கும் விடுதிகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களில் மேம்பாட்டுப் பணிகளுக்காக 1.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் மிகவும் மோசமாக இருந்தன அல்லது வேலையே தொடங்கப்படவில்லை. என்றாலும் அதற்கான பணம் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
“நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு ஏற்ப வேலைகளை முடிக்கத் தவறும் குத்தகையாளர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். வேலை முடிக்கப்பட்டுவதற்கு முன்னர் பணம் கொடுக்கப்படக் கூடாது”, என அந்த அறிக்கை வலியுறுத்தியது.
“அலட்சியமாக இருந்ததாகவோ ஊழலில் சம்பந்தப்பட்டதாகவோ கண்டு பிடிக்கப்படும்” நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”, எனவும் அந்த அறிக்கை கூறியது.
தம்புனானில் உள்ள மாநில சமய இடைநிலைப் பள்ளியில் மேம்பாட்டுப் பணிகளுக்காக 2009ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையில் 1.35 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றுமே செய்யப்படவில்லை.
அதே போன்ற நிலை பந்தாய் மானிஸ் மாநில சமய இடைநிலைப் பள்ளிக்கும் ஏற்பட்டுள்ளது. அங்கு நேரடியாக நியமிக்கப்பட்ட மிலுர் சலுயுஷன் என்னும் குத்தகை நிறுவனத்துக்கு செய்யாத வேலைக்கு அல்லது அரைகுறையாக முடிக்கப்பட்ட வேலைகளுக்கு ஒவ்வொரு வேலைக்கும் 2,000 ரிங்கிட் முதல் 24,000 ரிங்கிட் வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரடிப் பேச்சுக்கள் மூலம் நியமிக்கப்பட்ட Syarikat Pembinanan Umum Kasariah என்னும் நிறுவனத்துக்கு பழைய கதவுக்கு சாயம் பூசியதற்கு 20,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒப்பந்தப்படி பழைய கதவை மாற்றி புதிய கதவை பூட்டியிருக்க வேண்டும்.
அதே நிறுவனத்துக்கு பேசின்களை பொருத்துவதற்காக 15,000 ரிங்கிட் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேசின்களை எங்குமே காண முடியவில்லை.
மெனிப்பிர் மாநில சமய இடைநிலைப் பள்ளியில் 60 பிளாஸ்டிக் நாற்காலிகளுக்காக 6,600 ரிங்கிட் தரப்பட்டுள்ளது. இது சந்தை விலையை விட 340 விழுக்காடு கூடுதலாகும். அத்துடன் வாக்குறுதி அளிக்கப்பட்ட மாதிரி நாற்காலிகள் கொடுக்கப்படவில்லை.
ஏழை மாணவர்களுக்கான சீருடைகளும் பாலும் விநியோகம் செய்யப்படவில்லை
ஏழ்மையில் உள்ள பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களும் பள்ளிச் சீருடைகளும் பாலும் வழங்கப்படாதது குறித்து அந்த மாநில சமூக மேம்பாட்டு, பயனீட்டாளர் விவகார அமைச்சையும் அந்த அறிக்கை சாடியுள்ளது.
மொத்தம் 8,682 மாணவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் பால் கிடைக்கவில்லை. 2010ம் ஆண்டுக்கான சீருடைகள் தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விநியோகம் செய்வதற்கு மட்டும் 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையில் 848.36 மில்லியன் ரிங்கிட் தரப்பட்டுள்ளது.
சில ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தச் சீருடைகளை அணிவதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம் அவை கிடைத்த போது அவர்கள் இடைநிலைப் பள்ளிகளுக்கு மாறிக் கொண்டிருந்தனர்.
அந்தத் தாமதத்திற்குப் பதில் அளித்த குத்தகையாளர்கள், மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஜோடி சீருடைகளுக்குப் பதில் இரண்டு ஜோடிகளை வழங்குவது என முடிவு செய்ததால் தாங்கள் “போக்குவரத்து, மனித ஆற்றல் பிரச்னைகளை” எதிர்நோக்கியதாகக் கூறினார்.
சீருடை உதவியைப் பெற்றவர்கள் அந்தத் திட்டம் தங்களுக்கு மிகவும் நன்மை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டதால் அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என தலைமைக் கணக்காய்வாளர் பரிந்துரை செய்தார்.
என்றாலும் அதன் விநியோக முறை சீர் செய்யப்படுவதுடன் குத்தக்கையாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தாமதமாக பட்டுவாடா செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
கடந்த வெள்ளிக்கிழமை திரங்கானுவில் பள்ளிச் சீருடைகள் விநியோகம் செய்யப்படாதது பற்றிய செய்தியை மலேசியாகினி வெளியிட்டிருந்தது.