மகாதிர்: 1எம்டிபி பற்றி நஜிப் கூறிய “பொய்” கிரிமினல் குற்றமாகும்

 

Najib's lie1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) நிதியான அமெரிக்க டாலர் 1.103 பில்லியன் (ரிங்கிட் 3.97 பில்லியன்) எங்கு இருக்கிறது என்பது பற்றி பிரதமர் நஜிப் ரசாக் பொய் கூறியதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குற்றம் சாட்டினார். மேலும், அது குற்றமாக இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

அது போன்ற குற்றம் தண்டனைக்கு உரியதாகும். குற்றவியல் சட்டத் தொகுப்பின் கீழ் அதற்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றாரவர்.

பிரதமர் பொய் கூறினார் என்று கூறுவதை தம்மால் இனிமேலும் தவிர்க்க இயலாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று இன்று அவரது வலைப்பதிவில் மகாதிர் கூறியுள்ளார்.

மார்ச் 10 இல், நஜிப் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலை மகாதிர் குறிப்பிட்டார். அத்தொகை முழுவதும் ரொக்கமாக திரும்பப் பெறப்பட்டது என்றும், அது இப்போது பிஎஸ்ஐ பேங் லிமிடெட் சிங்கப்பூரில் வைக்கப்பட்டுள்ளது என்று நஜிப்  பதில் அளித்திருந்தார்.

ஆனால், கடந்த வியாழக்கிழமை, நிதி அமைச்சருமான நஜிப் அவ்விவகாரம் மீதான அவரது பதிலை மாற்றிக் கொண்டு. பிஎஸ்ஐ சிங்கப்பூரில் ரொக்கமாக இல்லை, ஆனால் இருப்பது வெறும் “அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகள்” என்று கூறினார்.

இப்பதில் அரசாங்க விவகாரங்களை மூடிமறைப்பதாகும் என்று மகாதிர் வர்ணித்ததோடு இது குற்றவியல் சட்டத்தொகுப்பு செக்சன் 218 இன் கீழ் ஒரு குற்றம் ஆகும் என்றார்.

இக்குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைதண்டனை அளிக்க அச்சட்டம் வகைசெய்கிறது என்றாரவர்.