மேல்முறையீட்டு நீதிமன்றம்: இந்திராவின் குழந்தைகளை மத மாற்றம் செய்த முறை சரியானதா?

 

indiraபாலர்பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தியின் மூன்று குழந்தைகளை மத மாற்றம் செய்ய பின்பற்றப்பட்ட முறை சரியானதா என்பதை புத்ராஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆய்வுக்கு உட்படுத்தியது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்திராவின் முன்னாள் கணவர் அக்குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்தார்.

மத மாற்றம் செய்த முறை சரிதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கான காரணம் சட்டத்திற்கு ஏற்ப இந்த மத மாற்றம் பேராக் முவல்லாப் பதிவாளரால் பதிவு செய்யப்படவில்லை என்பதாகும்.

அக்குழந்தைகளின் தந்தை கே. பத்மநாதன் என்ற முகம்மட் ரித்துவான் அப்துல்லா 12, 11 வருடம் மற்றும் 11 மாத வயதான மூன்று குழந்தைகளையும் – இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் – தாயார் உடனில்லாமலும் இன்னும் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றாமலும் 2009 ஆண்டில் மத மாற்றம் செய்தார். அவ்வாறான மத மாற்றம் செக்சன் 96, பேராக் இஸ்லாமிய நிர்வாகம், சட்டம் 2004 க்கு முரணானது.

பேராக் மாநில சட்ட ஆலோசகர் ரோகானா அப்துல் மாலெக் இன்று நீதிமன்றத்தில் ரித்துவான் செக்சன் 96 இன் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

ஆனால், அதே சட்டத்தின் செக்சன் 106 இன் கீழ் பின்பற்றப்பட வேண்டியவற்றில் ஒரு பகுதியை குழந்தைகள் பூர்த்தி செய்துள்ளனர் என்று ரோகானா கூறினார்.

மேலும், முவல்லாப் பதிவாளர் மத மாற்றத்தை நடத்தி வைக்கவில்லை என்றாலும் அளிக்கப்பட்டுள்ள மத மாற்ற சான்றிதழுக்கு சிவில் நீதிமன்றங்கள் சவால் விட முடியாது. சான்றிதழ்களுக்கு எவரும் சவால் விட முடியாது என்று தமது வாதத்தொகுப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்விடம் முன்வைத்தார்.

அமர்வுக்கு தலைமையேற்றிருந்த நீதிபதி பாலியா யுசுப் வாஹி வாதத்தொகுப்புகளை செவிமடுத்த பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தார். வாதத்தொகுப்புகளின் போது நீதிபதி பாலியா யுசுப் வாஹி வாதிகளைப் பிரதிநிதித்த ரோகானா மற்றும் பெடரல் அரசு வழக்குரைஞர் ஷம்சுல்போல் ஹசான் ஆகியோரை கேள்விகளால் குடைந்தெடுத்தார்.

பேராக் மாநில அரசையும், மாநில இஸ்லாமிய மன்றத்தையும் ரோகானா பிரதிநிதித்தார். ஷம்சுல்போல் கல்வி அமைச்சையும், வழக்குரைஞர் ஹதிம் ரம்லி, ரித்துவானையும் பிரதிநிதித்தனர்.

செவிமடுப்பின் போது நீதிபதிகள் தொடுத்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க பேராக் மாநில சட்ட ஆலோசகரும் ஷம்சுல்போலும் மிகவும் சிரமப்பட்டனர்.