மலேசிய குடிநுழைவுத் துறை, ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொரு ஜனநாயக-ஆதரவு ஆர்வலர் ஒருவரையும் நாடு கடத்த ஏற்பாடு செய்து வருகிறது.
ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினரான லியோங் குவொக்-ஹங் இன்று பிற்பகல் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து இறங்கியதுமே தடுத்து வைக்கப்பட்டார்.
பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த லியோங் தம் நிலைமையை விளக்கி ஏற்பாட்டாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தார்.
செவ்வாய்க்கிழமை, ஹாங்காங்கைச் சேர்ந்த ஜோசுவா வொங் பினாங்கு விமான நிலையம் வந்திறங்கியதுமே தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்.
சீனாவில் திருப்திப்படுத்தவே இந்த நாடுகடத்தல்கள் நடத்தப்படுவதாக ஊகங்கள் பெருகி வருகின்றன.
அவ்விருவரும் இன்றிரவு தியானான்மென் படுகொலையின் 26ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் உரையாற்றுவதாக இருந்தது.
இருவருமே ஹாங்காங் குடைப்புரட்சி இயக்கத்தில் முக்கியமானவர்கள். அந்த இயக்கம் 2017 தலைமை செயல் அதிகாரிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணியை ஆராய வேண்டுமென்ற பெய்ஜிங்கின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.