நிஸார்: நமக்கு வேண்டியது டிஎபி அனுதாபிகளா அல்லது அம்னோ கைப்பாவைகளா?

 

Nizarபாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கட்சியின் உறுப்பினர்களுக்கு “டிஎபி அனுதாபிகள்” வேண்டுமா அல்லது கட்சி விசுவாசிகள் வேண்டுமா என்று கேட்டிருந்ததைச் சாடிய முன்னாள் பேராக் மாநில மந்திரி புசார் நிஸார் ஜமாலுடின், அக்கேள்வி கட்சி உறுப்பினர்கள் “அம்னோ கைப்பாவைகளை” தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வதாகும் என்றார்.

“(முன்னாள்) பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், துணைப் பிரதமர் முகைதின் யாசின் மற்றும் பிரதமரின் சகோதரரும் கூட பிரதமர் நஜிப்பை குறைகூறி வரும் வேளையில், அம்னோ இப்போது அதன் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறது.

“ஆனாலும், நஜிப் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்” என்றாரவர். இது நஜிப் பதவி விலக வேண்டும் என்று மகாதிர் வலியுறுத்தி வரும் வேளையில் நஜிப் பதவியிலிருந்து விலகக் கூடாது என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள வேண்டுகோளை சுட்டியதாகும்.

“இதுதான் நிலைமை என்றால், நமக்கு தலைவராக இருப்பவர் யாராக இருக்க வேண்டும் – டிஎபியின் கைப்பாவையா அல்லது அம்னோவின் கைப்பாவையா – என்று நான் கேட்கலாம்”, என்று நிஸார் நேற்றிரவு கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் பலத்த கைத்தட்டலுக்கிடையில் கூறினார்.

பாஸ் கட்சியின் எதிர்வரும் தலைமைத்துவ தேர்தலில் டிஎபி மற்றும் பிகேஆர் இணைந்துள்ள பாக்கத்தான் கூட்டணியை ஆதரிக்கும் தரப்பினருக்கும் கட்சியின் பழமைவாதிகளான உலாமாக்களுக்கும் இடையில் நிலவும் கடும் போட்டியில் பாக்கத்தான் கூட்டணியை ஆதரிப்பவர்களை துரோகிகள், குற்றேவல் செய்பவர்கள் மற்றும் புல்லுருவிகள் என்றும் சாடப்படுகின்றனர்.