உத்துசான் இப்போது ஹுடுட் விவகாரத்தில் மரினா மகாதிரை தாக்குகிறது

marina-utusanஇப்போது வெளிப்படையாக நடைபெற்றுவரும் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தற்போதைய பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான போரில் அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா மகாதிரின் மகள் மரினா மீது பாயத் தொடங்கியுள்ளது.

அதன் வாராந்திர மிங்குவான் மலேசியாவில் அவாங் செலாமாட் என்ற புனைப்பெயரில் எழுதுபவர் ஹூடுட் பற்றி பேசும் போது மரினா கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் ஏனென்றால் அது முஸ்லிம்களின் உணர்வுகளைப் பாதிக்கக் கூடும் என்று எழுதியுள்ளார்.

“அவாங்கிடம் மரினா எதுவேண்டுமானாலும் கூறலாம், ஆனால் அவர், குறிப்பாக இஸ்லாமிய பிரச்னைகள் பற்றியதில், அதிகக் கவனமாக இருக்க வேண்டும். அவர் ஹூடுட்டிற்கு எதிராக இருந்தாலும் கூட, ஒரு முஸ்லிம் இது போன்ற கடுமையான கருத்துகளைத் தருவது அதிகபட்சமாகும்”, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமலேமெயில்ஓன்லைன் செய்திதளத்திற்கு அளித்திருந்த ஒரு நேர்காணலில் ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட்டால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று மரினா கூறியதாக சொல்லப்படுகிறது.

“கைகளை வெட்ட, வருந்துகிறேன், அல்லது மக்களை கல்லால் அடித்து சாகடிக்க, விரும்பும் மக்களுடைய நாட்டில் என்னால் வாழ முடியாது”, என்று அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த வாராந்திர செய்தித்தாள் மரினா மீது நடத்தியுள்ள அபூர்வமான இத்தாக்குதல் தற்போது மகாதிர் முகமட்டுக்கும் நஜிப்புக்கும் இடையிலான போரின் விரிவாக்கம் என்று காணப்படுகிறது