‘பொடா(பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்), தேச நிந்தனைச் சட்டங்கள்: நாடு எங்கே போகிறது’ என்ற கருத்தரங்கில் பேசிய அலிரான் தலைவர் பிரான்சிஸ் லோ மலேசியர்கள் மேலும் பல கொந்தளிப்புகளைச் சந்திக்க நேரும் என எச்சரித்தார்.
நாட்டில் உருவாகியுள்ள ‘புதிய அரசியலு’டன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில் இயங்கும் பிஎன் -அம்னோ அரசாங்கத்தால் ஒத்துப்போக முடியவில்லை என லோ கூறினார்.
“அவர்கள் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி பின்பற்ற முயன்ற ‘ரிபோர்மாசி முறை’யை நிராகரித்து, புதிய அரசியலுக்குக் கோரிக்கை விடுக்கும் மக்களை அடக்கிவைக்க யதேச்சாதிகார சட்டங்களைப் பயன்படுத்திப் பழைய அரசியலைத் திரும்பக் கொண்டு வந்துள்ளனர்.
“ஆனால், மன்னிக்க வேண்டும் ஐயா, மலேசிய சமுதாயம் பழைய நிலைக்குத் திரும்பிச் செல்லாது. அது விவசாய சமுதாயம் என்ற நிலையிலிருந்து தயாரிப்புத் துறை, சேவைத் துறை என நிரந்தரமாக மாற்றம் கண்டிருக்கிறது.
“இதனால், புதிய அரசியலை விரும்பும் மக்களுக்கும் புதிய அரசியல் தங்களைப் பொருத்தமற்றவர்களாக ஒதுக்கித் தள்ளிவிடும் என்று எண்ணம் கொண்டோருக்குமிடையில் உண்மையான பதற்றநிலை உருவாகியுள்ளது”, என்றவர் கூறினார்.
புதிய அரசியலில் நடுத்தர வகுப்பு மக்கள், பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் அதே வேளை அரசியல் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்க தெரு ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று லோ கூறினார்.
1998 ரிபோர்மாசி இயக்கத்தைத் தொடர்ந்து பல குழுக்கள்- பதிவு பெற்றவையும் பதிவு பெறாதவையும்- புதிய அரசாங்கம் பற்றிப் பேசுவதுடன் நல்லாட்சி, பொறுப்புடைமை, ஊழலுக்கு எதிரான போராட்டம், வெளிப்படைத்தன்மை, நீதி, சுற்றுச்சூழல் பற்றியெல்லாம் பேசத் தொடங்கி விட்டன என்றாரவர்.
























