இந்திய என்ஜிஒ-களுக்கு சிறப்பு நிதி திட்டம் தயார்

Special funding for Indian NGOsகுறைந்த வருமான வட்டத்தில் வாடும் இந்தியர்களை மேம்பாடு அடையச் செய்வதற்காக இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும், திறன் பயிற்சி கழகங்களுக்கும் சிறப்பு நிதி அளிப்பதற்கான திட்டத்தை பிரதமர்துறையின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு பிரிவு (செடிக்) முன்மொழிந்துள்ளது.

நாளை பிரதமர் நஜிப் ரசாக்குடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இத்திட்டத்திற்கான அவருடைய ஒப்புதல் பெறப்படும் என்று செடிக்கின் இயக்குனர் முனைவர் என். எஸ். இராஜேந்திரன் கூறினார்.

செடிக் தயாரித்திருக்கும் முழு நிதித் திட்டத்தையும் பிரதமர் நஜிப் காண்பார். இது கடந்த ஆண்டே செய்யப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால், வேலைத் திட்ட அட்டவணை பிரச்சனை காரணமாக அதனைச் செய்ய முடியவில்லை. ஆகவே, பிரதமர் அத்திட்டத்தை கவனிப்பார் என்பதோடு அதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவதாக இன்று தொடர்பு கொண்ட போது இராஜேந்திரன் பெர்னாமாவிடம் கூறினார்.

இந்த நிதி இந்திய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, தமிழர், மலையாளி, சீக்கியர் மற்றும் தெலுங்கர் உட்பட, குறைந்த வருமானம் பெருவோர் பங்கிட்டுக்கொள்வர் என்று இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்த சிறப்பு நிதிக்கான ஒப்புதல் கிடைத்தவுடன் அது பிரதமர்துறை அலுவலகத்திலிருந்து நிதி அமைச்சு வழியாக கிடைக்கும் என்று கூறிய இராஜேந்திரன், இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட அனைத்து நிதி திட்டங்களும் கடந்த ஆண்டின் இடைப்பகுதி வரையில் பொருளாதார திட்டப் பிரிவால் கையாளப்பட்டது. அதன் பின்னர், இந்தியர்களின் மேம்பாட்டிற்கான நிதியை கையாளும் முழு அதிகாரமும் செடிக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், இரண்டு மாதங்களுக்குள் நிதி பகிர்ந்தளித்தல் தொடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.