மலேசிய எல்லைக்குள் சீனக் கப்பல் ஊடுருவல்;ஈராண்டுகளாக அதே இடத்தில் நங்கூரமிட்டுள்ளது

shipமலேசிய  எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்த  சீனக்  கடலோரக்  காவல்படை  கலமொன்று  மலேசியாவின்  தனிப்பட்ட பொருளாதாரப்  பகுதிக்குள்  நங்கூரமிட்டு  நின்று  கொண்டிருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்  ஷாஹிடான்  காசிம்  கூறினார்.

ஷஹிடான்,  சரவாக்கிலிருந்து  84 கடல்மைல் (156கி.மீ)  தொலைவில்  தென்சீனக் கடலில்  உள்ள  பாதிங்கி  அலி  மணல் திட்டுப்  பகுதிக்கு  அதிகாரப்பூர்வ  பயணம்  மேற்கொண்டதாகவும்  அங்கு  சீனக்  கப்பல்  நங்கூரமிட்டிருப்பதைக்  கண்டதாகவும்   தம்  முக  நூல்  பக்கத்தில்  கூறியுள்ளார்.

அக்கப்பல்  ஈராண்டுகளாகவே  அதே  இடத்தில்  நங்கூரமிட்டிருப்பதாக  நேற்று  போர்னியோ  போஸ்ட்  கூறியிருந்தது.

அனைத்துலகச்  சட்டப்படி கடலில்  200  கடல்மைல்கள்வரை  ஒரு  நாட்டின்  தனிப்பட்ட  பொருளாதாரப்  பகுதி  என்பதால் அதுவும்  மலேசியாவின்  இறையாண்மைப்  பகுதியாகும்.

அப்பகுதில்  உள்ள  மணல்திட்டுகளைக்  காண்பிக்கும்  படங்களைப்  பதிவேற்றம்  செய்திருந்த  ஷஹிடான்  சிறு  குறிப்பையும்  சேர்த்திருந்தார்.

“இச்சிறிய  தீவு சர்ச்சைக்குரிய  பகுதி  அல்ல. ஆனால் வெளிநாட்டுக்  கப்பல் நம்  கடல் எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்துள்ளது”, என்றார்.

அது  எண்ணெய், எரிவாயு  வளமிக்க  பகுதியாம்.

அரச  மலேசிய  கடல்படையும்  மலேசிய  கடலோரக்  காவல்  படையும்  அவற்றின்  கப்பல்களை  அனுப்பி  சீனக் கப்பலைக்  கண்காணித்து  வருவதாக  ஷஹிசான்  தெரிவித்தார்.

சீனா, மலேசிய  எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்திருப்பது  இது  முதல்  முறை  அல்ல.

கடந்த  ஆண்டு  ஜனவரியில்  சரவாக்குக்கு  80 கிலோமீட்டர்  தொலைவில்  உள்ள  ஜேம்ஸ்  மணல்திட்டுப்  பகுதிக்குள்  மூன்று  சீனக்  கலங்கள்  நுழைந்ததாக  ராய்ட்டர்  அறிவித்திருந்தது.

மலேசியா அந்த  அத்துமீறலைக்  கண்டிக்கவில்லை. அப்படி  ஒரு  சம்பவம்  நடந்ததாக  ஒப்புக்கொள்ளவும்  இல்லை.