குவான் எங்: பாஸ் காலி செய்யும் பதவிகள் மற்ற மலாய்க்காரர்களைக் கொண்டு நிரப்பபடும்

postபினாங்கு  மாநில  முதல்வர்  லிம்  குவான்  எங், பாஸ்  வெளியேறுவதால்  மாநில  அரசில்  காலியாகும்  இடங்களை  நிரப்புவதில்  பிரச்னை  இருக்காது  என்கிறார்.

“தகுதிபெற்ற  மலாய்க்காரர்கள்  பலர்  இருக்கிறார்கள். அவர்களைக்  கொண்டு  பதவிகள்  நிரப்பப்படும்”, என்றாரவர்.

பாஸ்  கட்சி  முன்னாள்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு பூலாவ்  பினாங் நீர் விநியோகத்  துறையிலிருந்தும்  பினாங்கு  ஹலால்  மையத்திலிருந்தும்  பதவி  விலகப்  போவதாகத்  தெரிவித்துள்ளார். ஆனால், அவர்  பதவி  விலகல்  கடிதத்த்தை  இன்னும்  கொடுக்கவில்லை  என்று  லிம்  கூறினார்.

“மற்றவர்களும் அவ்ரைப்போல்  பதவி விலகுகிறார்களா,  பார்ப்போம். டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிய  பாஸ் முக்தாமார்  அதன்  உறுப்பினர்களை  பினாங்கு  அரசுப் பதவிகளிலிருந்து  விலகுமாறு  பணிக்காததுதான்  ஆச்சரியம்”, என்றாரவர்.

இதனிடையே, பினாங்கு அரசுப்  பதவிகளில்  உள்ள  பாஸ்  உறுப்பினர்கள்  பதவி  விலக  மாட்டார்கள்  என்றும்  அவர்கள்  பாஸ்  தலைமையின்  உத்தரவுக்காகக்  காத்திருப்பதாகவும்  உலாமா  பிரிவுத்  தகவல்  தலைவர்  முகம்மட்  கைருடின்  அமாம்  ரசாலி  கூறினார்.

61வது  முக்தாமாரில் கொண்டுவரப்பட்டது  டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளும்  தீர்மானம்  அல்லவென்றும்  உறவைத்  துண்டிப்பதா  வேண்டாமா  என்ற  முடிவை
பாஸ்  தலைமையிடம்  விட்டுவிடும்  தீர்மானம்தான்  கொண்டுவரப்பட்டதாகவும்  அவர்  விளக்கினார்.