‘பதவி விலக வேண்டாம்; டிஏபியிடன் உறவுகள் துண்டிப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை’

resignடிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளக்  கோரி  வார இறுதி  பாஸ்  முக்தாமாரில்  கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தைத்  தொடர்ந்து பினாங்கிலும்  சிலாங்கூரிலும்  அரசுப்  பணிகளில்  உள்ள  பாஸ்  தலைவர்கள்  “அவசரப்பட்டு” பணி  விலகிவிட  வேண்டாம் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

“தலைமை  முடிவெடுக்குமுன்னர்  அவசரப்பட   வேண்டியதில்லை”, என உலாமா  பிரிவுத்  தகவல்  தலைவர்  முகம்மட்  கைருடின்  அமாம்  ரசாலி  ஓர்  அறிக்கையில் கூறினார்.

முக்தாமாரில்  டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளும்  தீர்மானம் எதுவும்  ஏற்றுக்கொள்ளப்படவில்லை  என்றும்   உறவைத்  துண்டிப்பதா  வேண்டாமா  என்ற  முடிவை
பாஸ்  தலைமையிடம்  விட்டுவிடும்  தீர்மானம்தான்  கொண்டுவரப்பட்டதாகவும்  அவர்  விளக்கினார்.

பினாங்கு  அரசுப்  பதவிகளில்  உள்ள  பாஸ் தலைவர்கள்  பதவி விலகுவது  நல்லது  என முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறியிருப்பதை  வைத்து  பினாங்கு, சிலாங்கூரில்  உள்ள பாஸ்  தலைவர்கள்  அவசரப்பட்டுவிட  வேண்டாம்  என்றாரவர்.

பாஸ்  ஆண்டுக்கூட்டத்தில்  டிஏபியுடன்  உறவுகளை  முறித்துக்கொள்ளும்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டிருப்பதால்   பாஸ்  பிரதிநிதிகள்  தார்மீக  ரீதியில்  பினாங்கு  அரசுத்  துறைகளில்  வகிக்கும்  பதவிகளிலிருந்து  விலக  வேண்டியிருக்கும்  என  லிம்  நேற்று  கூறியிருந்தார்.