‘நிக் அசீஸ் முக்தாமார் தீர்மானத்தை ஆதரித்திருக்க மாட்டார்’

motionபக்கத்தான் ரக்யாட்டில்  இருப்பதை  மறுபரிசீலனை  செய்யும்  எண்ணம் பாஸின்  பழமைவாதிகளிடம்  நீண்ட  காலமாகவே  இருந்து வந்திருப்பதாகக்  கூறுகிறார்  அக்கட்சியின்  முன்னாள்  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஆவாங்.

டிஏபியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளும்  தீர்மானம்  இதற்குமுன்பே  டேவான்  உலாமா  முக்தாமாரில் கொண்டுவரத்  திட்டமிடப்பட்டிருந்ததாம்  ஆனால்,  பாஸ்  ஆன்மிக  தலைவர்  நிக்  அப்துல்  நிக்  மாட்  தலையிட்டு  அதைத் தடுத்து  விட்டாராம்.   மலேசியாகினியுடனான  தொலைபேசி  நேர்காணலில் அஹ்மட்  இதனைத்  தெரிவித்தார்.

“நிக்  அசிஸ்   இருந்தவரை  அப்படியொரு  தீர்மானம்  கொண்டுவரும்  துணிவு  அவர்களுக்கு  இல்லை. நிக்  அசிஸ்  போனபிறகு  எல்லாமே  மாறிவிட்டது. என்னைக் கூட (கட்சித்  தலைமையிலிருந்து) தூக்கி  எறிந்து  விட்டார்கள்”, என்றார்.

கட்சித்  தேர்தலில்  தலைவர் அப்துல்  ஹாடி  ஆவாங்கை  எதிர்த்துப்  போட்டியிட்டுத்  தோல்விகண்ட  அஹ்மட்,  ஹாடியின்  ஆதரவாளர்கள்  கட்சியின்  பெயரைக் கெடுத்து  விட்டார்கள்  என்றார்.

பாஸில் உள்ள  பழைமை  விரும்பிகள்  உண்மையிலேயே  டிஏபியை “வெறுக்கிறார்கள்”  என  அஹ்மட்  கூறினார்.

“அவர்களுடன் ஒத்துப்போகாதவர்களின்  விசுவாசத்தைக்  கேள்விக்குள்ளாக்குகிறார்கள், வெறுப்பை  உமிழ்கிறார்கள், வினோதமான  புனைபெயரிட்டு  அழைக்கிறார்கள்”.

பாஸ்  கட்சித்  தேர்தலில்  தோற்றவர்களுக்காக  அடுத்த  வாரம்  ஒரு  கூட்டம் ஏற்பாடு  செய்யப்பட்டிருப்பதாகவும்  அஹ்மட்  கூறினார்.

அஹ்மட்  பெர்சத்துவான்  உம்மா  செஜாத்ரா(பாஸ்மா)-வில் சேர்வார்  என்ற  ஊகங்களைத் தள்ளுபடி  செய்தார். எது  நடந்தாலும்  கட்சியில்  தொடர்ந்து  இருப்பது  என்பதில்  உறுதியாக உள்ளார்.