‘பதவி விலகுங்கள், பினாங்கு விழுகிறதா என்பது தெரிந்து விடும்’- பாஸுக்கு சவால்

ngபாஸ், அதன்  ஆதரவின்றி பினாங்கு  அரசு  நிலைக்காது  என்று  கூறுவதை  அபத்தம்  என்கிறார்  தஞ்சோங்  எம்பி  இங்  வை ஏய்க்.

“பாஸ் பினாங்கு  அரசில்  உள்ள அதன்  உறுப்பினர்களை  பதவி  விலகச் சொல்லுங்கள். பாஸ்  ஆதரவின்றி  டிஏபி-பிகேஆர்  அரசு  விழுகிறதா  இல்லையா  என்பது  தெரிந்து  விடும்”, என  பினாங்கு  டிஏபி  இளைஞர்  தலைவருமான  இங்  கூறினார்.

பினாங்கு  அரசுக்கு  மாநில  அரசையும் சட்டமன்றத்தையும்  கலைத்துவிட்டு  மறுதேர்தல்  நடத்தும்  துணிச்சல்  உண்டா  என்று  சவால் விடுத்துள்ள  கோலா  திரெங்கானு  பாஸ்  தகவல்  தலைவர்  அஹ்மட்  அம்ஸட் ஹஷிமுக்கு இங் இவ்வாறு  பதிலளித்துள்ளார்.

“டிஏபிக்கு  ஆணவம்  கூடாது. பாஸ்  இன்றி  அதன்  வலிமை  என்னவென்பதைத்  தெரிந்துகொள்ள  டிஏபி  விரும்பினால்  பினாங்கு  சட்டமன்றத்தைக்  கலையுங்கள்.

“புதிய  அரசாங்கத்தில் டிஏபி  எத்தனை  இடங்களைப் பெறுகிறது  என்பது  தெரிந்து  விடும்”, என்று  அஹ்மட் கூறியிருந்தார்.

பாஸ் என்னதான்  பெருமையடித்துக் கொண்டாலும்  1999-க்குப்  பிறகு அது  சட்டமன்றத்துக்கு ஒரே  ஓர்  இடத்தை  மட்டுமே  வென்றிருப்பதை  இங்  சுட்டிக்காட்டினார்.

“2008, மார்ச் 8-இல் டிஏபி 19  இடங்களையும்  பிகேஆர்  ஒன்பது  இடங்களையும்  வென்றன.  பாஸ்  இல்லாமலேயே  டிஏபி-பிகேஆர்  அரசு  அமைக்க  முடிந்தது.

“2013-இல்  டிஏபி  அதன்  19  இடங்களைத்  தக்க  வைத்துக்கொண்டது. பிகேஆர்  ஓர்  இடம்  கூடுதலாக  வென்று  அதன் சட்டமன்ற  இடங்களை 10ஆக  உயர்த்திக்  கொண்டது. இரண்டும்  சேர்ந்து  29  இடங்களை வைத்திருந்தன.

“டிஏபி  ஆணவம்  கொள்ளவில்லை பெருமையடித்துக்  கொள்ளவில்லை. உண்மைகளையும்  புள்ளி  விவரங்களையும்தான்  எடுத்துரைக்கிறோம்”, என்றாரவர்.