மகாதிர்: 1எம்டிபி -இன் முட்டாள்தனங்கள்

whyமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1எம்டிபி-இன்  பல  நடவடிக்ககள்  அதன் “முட்டாள்தனத்தை”ப் பறைசாற்றுவதாக உள்ளன  என்கிறார்.

அதே  வேளையில், தாம்  பலமுறை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சாடியிருந்தபோதும்  1எம்டிபி  செய்த  தவறு  என்னவென்பது மக்களுக்கு  இன்னும்  புரியாமலேயே  இருக்கிறது  என்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

“என் வலைப்பக்கத்தில் இடப்படும்  கருத்துகளிலிருந்தும்  கடைகளுக்குச்  செல்லும்போது  மக்கள்  கேட்கும்  கேள்விகளிலிருந்தும்  பலருக்கு  1எம்டிபி  பற்றி  அதிகம்  தெரியாமலிருப்பதைப்  புரிந்து  கொள்ள  முடிகிறது.

“நஜிப்,  கடன்வாங்கிய   ரிம42 பில்லியனை  வைத்து  ஏதோ  தப்பு  செய்து விட்டார்  என்பது  அவர்களுக்குத்  தெரிகிறது. ஆனால், அது  என்ன  தப்பு,  எதற்காக  அவரை  நான்  பதவி  விலகச் சொல்கிறேன்  என்பது  அவர்களுக்குப்  புரியவில்லை.

“அதனால், 1எம்டிபி-இன்  தவற்றை  நான்  கட்டம் கட்டமாக விளக்கித்தான்  புரிய  வைக்க  வேண்டும்”, என்று  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபி-இன் முதலீடுகள்மீது  பார்வையைச்  செலுத்திய  மகாதிர், மின் உற்பத்தித்  தொழில்களை   வாங்குவதற்கு  அது  கூடுதல் பணம்  கொடுத்திருப்பதைச்  சுட்டிக்காட்டினார்.  அவற்றின் மின்  உற்பத்தி  உரிமம் முடியும்  தருவாயில்  இருக்கும்போது  அவ்வளவு  விலை  கொடுத்திருக்க  வேண்டியதில்லை  என்றார்.

“உரிமம்  முடியும்வரை  1எம்டிபி  காத்திருக்காதது  ஏன்  என்பது  மர்மமாக  உள்ளது.

“1எம்டிபி  ரிம18 பில்லியனுக்கு  டி ஆனந்தகிருஷ்ணனின்  தஞ்சோங்  எனர்ஜி, கெந்திங்  சன்யேன், ஜிமா  எனர்ஜி ஆகிய  நிறுவனங்களை வாங்கியது. அவற்றின்  ரிம6பில்லியன் கடனையும்  ஏற்றுக்கொண்டுள்ளது.

“அதிக விலை  கொடுத்து  வாங்கப்பட்டதால்  அவற்றை  விற்றவர்களுக்கு  ரிம3 பில்லியன்  கூடுதல்  ஆதாயம்  கிடைத்திருக்கும்.

“ஆக, வாங்கும்  கடனும்  கூடுதலாக இருந்து, செய்யும்  முதலீடும்  அதிகமாக இருக்குமானால், வரும்  ஆதாயம்  குறைவாகத்தானே  இருக்கும்? 1எம்டிபி  ஏன் இவ்வளவு  முட்டாளாக  இருக்கிறது?”, என்றவர்  வினவினார்.

நிலம் மிகக்  குறைந்த  விலைக்கு விற்கப்பட்டது
நில  விற்பனை  பற்றிக்  குறிப்பிட்ட  மகாதிர், ஜாலான்  துன்  ரசாக்  நெடுகிலும்  உள்ள நிலத்தில் பூமிபுத்ராக்களுக்குக்  கடைவீடுகள்  கட்டுவதாக  இருந்தது.

ஆனால், அரசாங்கம்  அந்த  70 ஏக்கர்  நிலத்தை ரிம320 மில்லியனுக்கு  1எம்டிபி-க்கு  விற்றிருக்கிறது. அதாவது ஒரு  சதுர அடி ரிம60-க்கு  விற்கப்பட்டிருக்கிறது. அதே  வேளை  அதன்  அருகில்  இருந்த  நிலம் ரிம7,000-க்கு  விலை  போனது.

அதன்  அடிப்படையில்  பார்த்தால்கூட  1எம்டிபி  ஒரு  சதுர அடி  நிலத்துக்கு குறைந்தது ரிம3,000-இலிருந்து  ரிம4,000வரை கொடுத்திருக்க  வேண்டும்.

“அந்த  விற்பனை  மூலம்  அரசாங்கம்  பெரும்  தொகை  இழந்திருக்கிறது. அரசாங்கம்  எதற்காக இவ்வளவு  குறைந்த  விலையில்  அந்த  நிலத்தை விற்க  வேண்டும். ஒரு  வேளை பிரதமர்  விற்கச்  சொன்னாரோ.

“அப்படி நடந்திருந்தால்  அது  தவறாகும். அதிகாரமீறலாகும். நிலத்தின்  முழு பெறுமதியும்  அரசாங்கத்துக்குக்  கொடுக்கப்பட  வேண்டும்”, என்றவர்  சொன்னார்.

அதனை  அடுத்து,  1எம்டிபி  அந்த  நிலத்தின் ஒரு  சிறிய  பகுதியை,  70 ஏக்கரை  எந்த  விலைக்கு  வாங்கியதோ  அந்த  விலையில், விற்பதற்கு  முடிவு  செய்தது.

“சொத்துரிமை கைக்கு  வருமுன்னரே  நிலத்துக்கான  விலையை  தாபோங்  ஹாஜி  கொடுத்திருக்கிறது. 1எம்டிபி-க்கு  அவசரமாக  பணம்  தேவைப்பட்டது  தெளிவாக  தெரிகிறது.

அரசாங்கம் அந்த நிலத்தை சதுர அடிக்கு ரிம60 என்ற  விலையில்  1எம்டிபிக்கு  விற்றிருக்கும்போது  அதுவும் அதே  விலைக்குத்தான்  தாபோங்  ஹாஜியிடம்  விற்றிருக்க  வேண்டும்.

“ஆனால், அது  1எம்டிபிக்குப்  பெரும்  ஆதாயம்  தேடிக்கொள்ள  யாத்ரிகர்களின்  பணத்தைப்  பயன்படுத்திக்  கொண்டது”.

சுங்கை  பீசி  விமான  நிலைய  நிலம் வாங்கப்பட்டதிலும்  இதே கதைதான்  நடந்தது  என்றார் மகாதிர்.

“1எம்டிபி  சதுர  அடிக்கு  ரிம90  என  மிகக்  குறைந்த  விலையில்  அந்த  நிலத்தை  வாங்கியது. அந்த  நிலத்தின்  மதிப்பு  குறைந்தது  சதுர  அடிக்கு  ரிம2,000ஆக இருக்கும்”.

இதற்கு மாறாக  1எம்டிபி  பினாங்கில்  ஒரு  தனியார்  நிலத்தைக்  கூடுதல்  விலைக்கு  வாங்கியதையும்  மகாதிர்  சுட்டினார்.

“அந்த  நிலம்  நகர மத்தியில்கூட இல்லை. ஆயிரத்தும்  மேற்பட்ட  குடிசைவாசிகள்  அதில் குடியிருக்கிறார்கள். அதை  மேம்படுத்துவதற்கு  பினாங்கு  அரசின்  ஒப்புதலும்  இல்லை.

“ஆக, பயனற்ற நிலத்தை  வாங்க 1எம்டிபி அதிக  விலை  கொடுத்திருப்பதுபோல்  தெரிகிறது. ஏன்?”, என்றவர்  வினவினார்.

1எம்டிபி  அதன்  சொத்துகளின்  மதிப்பு ரிம52 பில்லியனுக்குமேல்  எனக்  கூறிக்கொள்வதையும்  மகாதிர்  சுட்டிக்காட்டினார்.

“சொத்துகள்  எப்படி  மதிப்பிடப்பட்டன  என்பதற்கு  இதுவரை விளக்கம்  இல்லை. மின் உற்பத்தி  ஆலைகளின்  மொத்த  மதிப்பு  என்ன, நிலத்தின்  மதிப்பு  என்ன?

“சொத்துகளை  மேம்படுத்தினால்  அவற்றின்  மதிப்பு  மேலும்  கூடலாம். ஆனால், அதற்கு  பல  பில்லியன்களை  முதலீடு  செய்ய  வேண்டியிருக்கும். அதன் பின்னரே  விற்க  முடியும்.  இந்தச்  செலவுகளை  எல்லாம்  கழித்தால்  ஆதாயம்  பெரிதாக  இருக்காது. அந்த  வகையில்  பார்த்தால்  மின் உற்பத்தி  ஆலைகள்  மற்றும்  நிலத்தின்  மதிப்பு  ரிம52 பில்லியனாக  இருக்க  வாய்ப்பில்லை.

“இந்தப்  பணத்தை  வைத்து  கடன்களைத்  திருப்பிச்  செலுத்தினாலும்  பல  பில்லியன்கள்  மறைந்த  மாயம்  கண்டுபிடிக்கப்பட  வேண்டும் அல்லது  அவற்றின்  இழப்புக்கு  1எம்டிபி-யைப்  பொறுப்பாக  வேண்டும்”, என்றவர்  கூறினார்.