இண்டர்லோக் எஸ்பிஎம் தேர்வுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக பயன்படுத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்நூல் பள்ளியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நியட், அதன் போராட்டத்திற்கு கடந்த பத்து மாதங்களாக எந்தத் தீர்வும் இல்லாமல் இருந்து வருவதுடன் அது கல்வி அமைச்சுக்கும் இதர அரசாங்க இலாகாகளுக்கும் அனுப்பியிருந்த 56 கடிதங்களுக்கும் மகஜர்களுக்கும் இன்று வரையில் பதில் ஏதும் இல்லாததால், இண்டர்லோக் பாடநூல் விவகாரத்தை பேரரசரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
“நாம் இப்போது நமது போராட்டத்தின் முக்கியமான கட்டத்திற்குச் செல்கிறோம். இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரும் மனுவை பேரரசரிடத்திலும், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆட்சியாளர்களிடத்திலும் வழங்க இருக்கிறோம்”, என்று நியட் தலைவர் தஸ்லிம் இப்ராகிம் இன்று பிற்பகல் கேல்சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அம்மனுவின் நகல்கள் பிரதமருக்கும், துணைப் பிரதமருக்கும் அனுப்பப்படும். சரியான நேரத்தில் பொதுமக்களுக்கும் வெளியிடப்படும் என்றாரவர்.
“பேரரசரிடம் மனு கொடுப்பது கடுமையான விவகாரமாகும்”
மலேசிய கல்வி அமைவு பல்லினம் மற்றும் பல கலாச்சாரங்கள் சம்பந்தப்பட்டதாகும். இண்டர்லோக் பிரச்னை ஒரு மலேசிய பிரச்னையாகும், இது இந்தியர் மட்டும் சார்ந்த பிரச்னையல்ல, ஏனென்றால் எஸ்பிஎம் தேர்வில் மலாய் இலக்கிய பாட சோதனைக்கு அமரும் அனைத்து மாணவர்களையும் அது பாதிக்கிறது என்று அச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட சிபிஐயின் இயக்குனர் டாக்டர் லிம் டெக் கீ கூறினார்.
“பாரபட்சமான, இனவாத அடிப்படையிலான, மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கெடுதல் விளைவிக்கிற அந்நூல் பாடநூலாக பயன்படுத்தப்படுவதற்குரிய தகுதியற்றது.
“கல்விமான்களும், மாணவர்களும்கூட அந்நூல் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“அந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட முறையீடுகள் மறுக்கப்பட்டன.
“இப்போது அவ்விவகாரம் தேசிய அளவிற்கு எட்டியுள்ளது. பேரரசரிடம் மனு கொடுப்பது கடுமையான விவகாரமாகும். மாணவர்களிடமிருந்து அந்நூலை அகற்றுவதற்கான நமது முயற்சியில் இது கடைசியானதாக இருக்காது”, என்று டாக்டர் லிம் டெக் கீ மேலும் கூறினார்.
இண்டர்லோக் விவகாரம் இந்தியர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நியட் தலைவர் தஸ்லிம் இப்ராகிம், சீன, மலாய் மற்றும் இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்புகள் இந்நூல் மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன என்றார். “சாபா மற்றும் சரவாக் மாநில அரசு சார்பற்ற அமைப்புகளும் இதனை ஆதரிக்கின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
இண்டர்லோக் விவகாரத்தில் தலையிடக் கோரும் மனு பேரரசரிடம் நவம்பர் 12 லும், சிலாங்கூர் சுல்தானிடம் நவம்பர் 19 லும், நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் நெகிரியிடம் நவம்பர் 26 லும் வழங்கப்படும் என்று நியட் தலைவர் தஸ்லிம் அறிவித்தார்.
மாணவர்களின் இக்கட்டான நிலை
திருத்தப்பட்ட இண்டர்லோக் பதிப்பு சில பள்ளிகளுக்கும் திருத்தப்படாத பதிப்பு சில பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக நியட் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பாலா தர்மலிங்கம் கூறினார்.
ஆறுமாதங்களுக்கு முன்னதாக எஸ்பிஎம் தேர்வுக்கு மலாய் இலக்கிய பாடத்திற்கான கேள்விகள் தயாரிக்கப்பட்டு விட்டன என்றாரவர். அக்கேள்விகள் திருத்தப்படாத இண்டார்லோக் நூலை அடிப்படையாக கொண்டவை என்று டாக்டர் லிம் தெரிவித்தார்.
திருத்தப்பட்ட நூலைப் பெற்ற மாணவர்கள் திருத்தப்படாத நூலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பர்? அவர்கள் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளனர் அல்லவா?”, என்று டாக்டர் பாலா வினவினார்.
எஸ்பிஎம் தேர்வு நவம்பர் 14 இல் தொடங்கவிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிப்பதற்கான வழி என்ன?
மாணவர்கள் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதில் ஆசிரியர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. “பெற்றோர்களும் ஆசிரியர்களும் போதுமான அளவிற்குத் தங்களைத் தயார் செய்து கொண்டு கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளில் விரும்புகின்ற கேள்விகளைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்”, என்று டாக்டர் லிம் ஆலோசனை தெரிவித்தார்.