பிகேஆர் இளைஞர் தலைவர், ஆனால் அரசியலில் விருப்பமற்றவர்

melissaமெலிஸா   சசிதரன் ஜோகூரைச்  சேர்ந்த  ஓர்  இளம்  வழக்குரைஞர். அரசியலில்  பெரிதாக  ஆர்வம்  இருந்ததில்லை. அரசியல்  கட்சியில்  சேரும்  எண்ணம்  இருந்ததே  இல்லை.

“13வது  பொதுத்  தேர்தலில்  தேர்தல்  முகவராக  இருந்தேன். அவ்வளவுதான்  நம் அரசியல். அதற்குமேல் போவதில்லை  என்பதுதான்  என்  முடிவாக  இருந்தது.

“அரசியல்  விழிப்புணர்வு  இருந்தாலும்  அரசியல்  கட்சியில்  சேரும்  எண்ணமெல்லாம்  கிடையாது. அரசியலை  அரசியல்வாதிகளிடமே  விட்டுவிட  வேண்டும் என்பதே  என்  கருத்தாக இருந்தது. நான்  ஒரு  வழக்குரைஞர். நமக்குச்  சட்டம் போதும்  என்றிருந்தேன்”, என்று  மெலிஸா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஆனால், அந்த  வைராக்கியம்  நிலைக்கவில்லை.

“(கடந்த  ஆண்டு) பிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  என்னை  அணுகிக்  கட்சியில்  சேருமாறு  கேட்டுக்கொண்டார்.

“நீண்ட  நேரம்  சிந்தித்தேன். முடிவெடுப்பது  சிரமமாக  இருந்தது. ஆனால், நண்பர்கள்  அதற்கு  ஆதரவாக  இருந்தது  முடிவெடுப்பதற்கு  வ்சதியாக போனது”, என்றார்.

அதன்பின்  மெலிஸா பிகேஆரில்  சேர்ந்தார். பல்லூடகப்  பல்கலைக்கழகப்  பட்டதாரியான  அவர்  பிகேஆர்  செயல்குழு  உறுப்பினராக  நியமிக்கப்பட்டார். இளைஞர்  பகுதி  அரசியல்  கல்விப்  பிரிவுக்கும்  பொறுப்பாளரானார்.

இனி  என்ன, அடுத்த  பொதுத்  தேர்தலில்  களம்  இறங்குவாரா?

“இப்போதைக்கு அதில்  எல்லாம்  ஆர்வம்  இல்லை”, என்கிறார்  மெலிஸா..

“பெண்  அரசியல்வாதிகளைப்  பெரிதும்  மதிக்கிறேன். அவர்கள்  இல்லாதது, பொல்லாததையெல்லாம்  எதிர்கொள்ள  வேண்டியிருக்கிறது. அந்தத்  துணிச்சல்  எனக்கு  உண்டா,  தெரியாது.

“இப்போதைக்கு  என்  நிலையை  ஒரு  தளமாகக்  கொண்டு  மனித  உரிமை  விவகாரங்களை  வலியுறுத்த போராட   விரும்புகிறேன்”, என்றாரவர்.