டிஏபி எம்பி மகாதிரைச் சாட்சியாக அழைப்பார்

ngaதைப்பிங்  எம்பி  இங்கா  கொர்  மிங், தமக்கெதிராக  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரும்  தொடுத்துள்ள  வழக்கில்  சாட்சியம்  அளிக்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டை  அழைக்கப்போவதாகக்  கூறினார்.

மகாதிரும்  அவரின்  வலைப்பதிவில்  ரோஸ்மா  பிரதமர்  போன்று  நடந்துகொள்வதாக பலர்  தம்மிடம்  முறையிட்டிருப்பதாக  எழுதியுள்ளார்  என  இங்கா  குறிப்பிட்டார்.

“ஏன்  மகாதிர்மீது  வழக்கு  தொடுக்காமல்  என்மீது  மட்டும் தொடுக்க  வேண்டும்?  நான்  மகாதிரை  ஒரு  சாட்சியாக  அழைக்கப்  போகிறேன்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  ரோஸ்மாவும்  தங்களை  அவமதித்து   முகநூலில்  பதிவிட்டிருப்பதாகக்  கூறி பேராக்  டிஏபி  தலைவருக்கு  எதிராக  வழக்கு  தொடுத்திருப்பதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்துள்ளது.

எம்பி  என்ற  முறையில்  ஒரு  நியாயமான  கருத்தையே  தாம் தெரிவித்ததாகவும்  அதனாலேயே  அவ்விருவரிடமும்  மன்னிப்பு  கேட்க மறுத்ததாகவும்  இங்கா  தெரிவித்தார்.

இவ்வழக்கு  மலேசியாவில்  கருத்துச்  சுதந்திரம்  சரிந்து  போயிருப்பதைக்  காண்பிக்கிறது  என்றாரவர்.

“ஒரு   எம்பி-ஆன  எனக்கு  கேள்வி  கேட்கும்  உரிமைகூட  இல்லாமல்  போய்விட்டது”, என்று  மேலும்  சொன்னார்.