‘மகாதிர்தான் என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டார்’-காலஞ்சென்ற சுல்தானின் புதல்வர்

lateமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், காலஞ்சென்ற  ஜோகூர்  ஆட்சியாளர் சுல்தான்  இஸ்கண்டார்  சுல்தான்  இஸ்மாயிலைப் பயன்படுத்தி  உச்ச  நீதிமன்றத் தலைவராக  இருந்த  நீதிபதி  சேலே  அப்பாஸை, 1988-இல்  பதவியிலிருந்து  வெளியேற்றினாராம்.

காலஞ்சென்ற  ஜோகூர்  சுல்தானின்  மகன்  துங்கு  அப்துல்  மஜிட்  இட்ரிஸ் இஸ்கண்டார்  முகநூலில்  இவ்வாறு  கூறினார்.

அப்போது  பேரரசராக  இருந்த  சுல்தான்  இஸ்கண்டா  தலைமை  நிதிபதிமீது  கோபம்  கொண்டிருந்ததாக  மகாதிர்  கடந்த  சனிக்கிழமை  கூறியிருந்ததற்கு  எதிர்வினை  ஆற்றிய  துங்கு  இவ்வாறு  கூறினார்.

சாலே  வெளியேற்றப்பட்டதற்கு  மகாதிரே  காரணம்  என்று  பரவலாகப்  பேசப்பட்டாலும் சுல்தான்  இஸ்கண்டாருக்குத்தான்  சாலேமீது  கோபம்  என்றும் ஆனால்,  சாலேயை  வெளியேற்றிய  பழியைத்  தாம்  ஏற்றுக்கொண்டதாகவும்  மகாதிர்  கூறியிருந்தார்.

“மகாதிர்  சாலேயை  வெளியேற்ற  என்  தந்தையைப்  பயன்படுத்திக்  கொண்டார் என்பதே உண்மை. சாலே  நல்ல  மனிதர். என்  தந்தைக்கும் அது  தெரியும்.

“அவர் (சுல்தான்) துன்  சாலேயுடன்  ஏற்கனவே  சமாதானம்  செய்து  கொண்டிருந்தார்.

“மகாதிர் அவர்களே,  தங்களைத்  தற்காத்துக்கொள்ள  முடியாதவர்கள்மீது தயவு  செய்து  பழி  போடாதீர்கள்”, என்று  துங்கு  மஜிட்  கூறினார்.