அருள் ஓர் அசாதாரணமான பொய்யர், புவா கூறுகிறார்

arulextraordinaireமுன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் 1எம்டிபி தலைவரான அருள் கந்தா கந்தசாமியை ஒரு பொய்யர் என்று வர்ணித்திருந்தார். அவரை விட ஒரு படி மேலே சென்று அருளை ஓர் “அசாதாரணமான பொய்யர்” என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார்.

1எம்டிபி நிதி நிலைமை குறித்து அருள் பொய் கூறியுள்ளார் என்று மகாதிர் தெரிவித்த குற்றச்சாட்டை திசைதிருப்பும் முயற்சியாக 1எம்டிபி நேற்று வெளியிட்டிருந்த நீண்டதோர் விளக்கத்தைத் தொடர்ந்து, புவா இவ்வாறு கூறினார்.

முன்னதாக, கேமென் தீவிலிருந்து திரும்பப் பெறப்பட்ட 1எம்டிபியின் யுஎஸ்$1.103 பில்லியனை ரொக்கமாக தாம் கண்டதாகவும், அந்த ரொக்கம் சிங்கப்பூரில் வைக்கப்பட்டது என்றும் அருள் கூறியிருந்தர். ஆனால், அது ரொக்கத்திற்கு மாற்றாக “யுனிட்ஸ்” என்று கூறப்பட்டது.

ஆனால், அருள் அவ்வாறு கூறவே இல்லை என்று 1எம்டிபி கூறியது. மேலும், அருள் “அறிக்கைகளை” பார்த்ததாக கூறினார் என்பதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று 1எம்டிபி அதன் அறிக்கையில் வலியுறுத்தியது.

இருப்பினும், இந்த விளக்கம் நிறுவனம் அதன் பொய்யுரைக்கும் முயற்சியில் மேற்கொண்ட இன்னொன்றாகும் என்று புவா மேலும் கூறினார்.

“1எம்டிபியின் தலைவர் திட்டவட்டமாக இப்படி கூறினார்: ‘ரொக்கம் யுஎஸ் டாலரில் நமது கணக்கில் இருக்கிறது. (அது குறித்து) நான் உறுதியளிக்க முடியும்…நான் அறிக்கைகளைப் பார்த்துள்ளேன்.’

“ஆகவே, அருள் கந்தா கூறிய ‘அறிக்கைகளைப் பார்த்துள்ளேன்’ என்பதை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு அவரது வாக்கியத்திலுள்ள ‘ரொக்கம் யுஎஸ் டாலரில் நமது கணக்கில் இருக்கிறது’ என்பதையும் சுட்டிக் காட்டாதது 1எம்டிபியின் வெளிப்படையற்ற செயலாகும்'”, என்றார்.

இது அருள் ஓர் “அசாதாரணமான பொய்யர்” என்பதை நிருபிக்கிறது என்று டோனி புவா கூறினார்.