மூன்றாவது திருமணம் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம்

tuan2001-இல், டிஏபி  தீர்க்க முடியாத  கருத்து  வேறுபாடுகள்  நிலவுவதாகக்  கூறி  பாஸ் கட்சியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டது.

பதினான்கு  ஆண்டுகளுக்குப்  பின்னர்  இரண்டாவது  திருமணமும்  அதே  காரணங்களால் முறிந்து  போனது.

பாஸும்  டிஏபி-யும்  ஒன்று  மற்றொன்றின்  கொள்கைகளுடன்  ஒத்துப்போக  முடியாது.  ஆனாலும்,  அவற்றுக்கிடையே விரும்பவும்  முடியாத  வெறுக்கவும்  முடியாத  உறவு  ஒன்று ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அதனால்,  மூன்றாவது  முறையாக இரண்டுக்குமிடையில் ஒரு  பிணைப்பு  ஏற்படும்  சாத்தியம் உள்ளது.

பாஸும் டிஏபி-யும் 2008-இல்  இரண்டாவது முறையாக   ஒன்று  சேர்ந்தபோது  அப்பிணைப்பு  முதலாவது  பிணைப்பைவிட  நீண்ட காலம்  நீடித்ததைப்  புதிதாக  பாஸ்  துணைத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்  துவான்  இப்ராகிம் மான் சுட்டிக்காட்டினார்.

“அந்த  வகையில்  மூன்றாவது  முறையாக  உருவாகும்  ஒத்துழைப்பு முந்தியதைவிட  நீண்ட  காலம்  நிலைத்திருக்கலாம்”, என்றாரவர்.

ஆனாலும், எதிர்காலத்தில்  நடக்கப்போவதை  யாராலும்  முன்னறிந்து  கூற  முடியாது  என்று  கூறிய  துவான்  இப்ராகிம், தோல்விகூட  பிற்காலத்தில்  ஒரு  வரமாக  அமையலாம்  என்றார்.

“2004-இல் மிகப்  பெரிய  தேர்தல்  வெற்றியைப்  பெற்ற  அம்னோ இப்போது  குறைவான  எண்ணிக்கையில்  வாக்குகள்  பெறும்  என்பதை  யாராவது  எதிர்பார்த்திருக்க  முடியுமா?”, என்றவர்  வினவினார்.

நேற்று,  இன்னொரு  பாஸ்  தலைவர், முஸ்தபா  அலியும்,  பக்கத்தான்  செத்து  விட்டதாக  டிஏபி  அறிவித்திருப்பதை நிராகரித்தார்.

கூட்டணி  தற்காலிகமாக “மயங்கிக்  கிடக்கிறது”  என்று  கட்சியின்  தேர்தல்  இயக்குனரான  அவர்  சொன்னார்.

பாஸும்  டிஏபி-யும்  மீண்டும்  கைகோப்பதை  முஸ்தபா நிராகரிக்கவில்லை. எந்தவொரு  அரசியல்  கட்சியாலும்  தனித்து  செயல்பட இயலாது  என்றாரவர்.