‘சீர்திருத்தம் பேசும்’ பண்டிகார் ஏன் பங்கை அடக்கி வைக்கவில்லை?

bung mokபுதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  “கொலை மிரட்டல்”  விடுத்த  கினாபாத்தாங்கான் எம்பி பங்  மொக்தார் ரடின்மீது மக்களவைத்  தலைவர்  நடவடிக்கை  எடுத்திருக்க  வேண்டும்.

பங்  மொக்தார் தம்  வீட்டுக்கு  முன்புறத்தில்  நடந்த  ஆர்ப்பாட்டம்  பற்றி  நாடாளுமன்றத்தில் பேசியபோது விடுத்த  அம்மிரட்டல்  குறித்துக்  கருத்துரைத்த    பல  வழக்குரைஞர்கள்  இவ்வாறு  தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரரகள்  தம்  குடும்பத்தாருக்குத்  தொல்லை  கொடுத்ததாகக்  கூறிய  பங், அவர்களின்  நல்ல  காலம்  தாம்  அப்போது  வீட்டில்  இல்லாமல் போனது  என்றார். இருந்திருந்தால்  “சிலர் இறந்திருக்கக்கூடும்” என்றவர்  சொன்னார்.

மீண்டும்  அப்படி ஓர்  ஆர்ப்பாட்டம்  நடத்தும்  துணிச்சலுண்டா
என்றவர்  சவால் விடுத்தார்.

அரசமைப்பின்படி  நாடாளுமன்றத்தில்   எம்பிகளுக்கு சட்டவிலக்கு உண்டுதான். ஆனாலும் பங்கின்  பேச்சு  “நாடாளுமன்றத்துக்கு  ஏற்புடையதல்ல”, அதனால்  அவரைக்  கண்டிக்க  வேண்டும்  என வழக்குரைஞர்  நியு  சின்  கூறினார்.

பல  எதிரணி எம்பிகள்  இதைவிட  சிறிய  குற்றங்களுக்காகக்  கண்டிக்கப்பட்டுள்ளனர், இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கிறார்கள்  என சுதந்திரத்துக்காக  போராடும்  வழக்குரைஞர்கள்  இணை- நிறுவனர்  எரிக் பால்சன் குறிப்பிட்டார்.

2013-இல் பாடாங்  செராய்  எம்பி,  என். சுரேந்திரன்  மக்களவைத்தலைவர்  பாரபட்சம்  காண்பிக்கிறார்  என்று  குற்றம்சாட்டியதற்காக ஆறு  மாதங்களுக்கு  இடைநீக்கம்  செய்யப்பட்டது  ஓர்  எடுத்துக்காட்டு.

“ஆனால், இந்த  விசயத்தில்  மக்களவைத்  தலைவர்    கண்ணை  மூடிக்  கொண்டார்போல்  தோன்றுகிறது”, என்றாரவர்.

பிகேஆர்   சட்டப்  பிரிவுத்  தலைவர்  லத்திபா  கோயா, கொலை  மிரட்டல்  விடுக்கும் ஒருவருக்குச்  சட்டவிலக்கு  அளிக்கப்படுவது  எப்படி  என்பது  தமக்குப்  புரியவில்லை  என்றார்.

அப்போது  அங்கிருந்த பண்டிகார்  அமின்  மூலியா பாரபட்சமாகத்தான்  நடந்து  கொண்டார்  என்பது  தெளிவு  என்றாவர்.

“இதை  எல்லாம் அனுமதிக்கும்  அவர்  நாடாளூமன்றச்  சீரமைப்புப்  பற்றிப்  பேசுவதைத்தான்  புரிந்து  கொள்ள  முடியவில்லை”, என  லத்திபா  கூறினார்.