‘அன்வார் வெளிநாட்டு ஊடகங்களை நாடியபோது ஆத்திரப்பட்டாரே டாக்டர் மகாதிர்’

mediaதுணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கப்பட்டபோது அன்வார்  இப்ராகிம்   தம்  மனக்குறைகளை  வெளிநாட்டு  ஊடகங்களிடம்  வெளியிட்டார்  என்பதற்காக அப்போதைய  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவர்மீது  மிகவும்  ஆத்திரமடைந்ததாக  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  அனுவார்  மூசா  கூறினார்.

ஆனால், அதே  மகாதிர்  இப்போது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  கொண்ட  அதிருப்தியை  வெளிப்படுத்த  அதே வெளிநாட்டு  ஊடகங்களைத்தான்  நாடுகிறார்  என்றாரவர்.

நியு  யோர்க்  டைம்சில்  மகாதிர்  தெரிவித்த கருத்துகளால் ஏமாற்றமடைந்ததாக  தெரிவித்த  அனுவார்  மூசா, “அப்போது  அவருக்கு  அது  பிடிக்காதிருந்தது”, என்றார்.

அன்று  அவர்  உபதேசித்ததை  இன்று  கடைப்பிடிக்காதது  ஏன்  என்பது தமக்குப்  புரியவில்லை  என்றாரவர்.

ஜூன் 17-இல்  நியு  யோர்க் டைம்ஸ்  நாளேட்டுக்கு  நேர்காணல்  வழங்கிய   டாக்டர்  மகாதிர், “அம்னோ, அரசியல்-அரவணைப்பை  நாடுவோரின்  சங்கமமாக  மாறிவிட்டது”  என்று  வருணித்தார்.

தகுதியற்ற  தலைவர்கள், “அவர்களைக்  காட்டிலும்  அறிவாளிகளைக்  கட்சிக்குள்  விடாமல்  தடுக்கிறார்கள்”  என்றும்  அவர்  சொன்னார்.