1எம்டிபி பணத்தை நஜிப் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டாரா?

wsjபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி நிதிகளை  13வது  பொதுத்  தேர்தல் பரப்புரைக்குப்  பயன்படுத்திக்  கொண்டதாக  வால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருக்கிறது.

2012-இல்  கெந்திங் குழுமத்திடமிருந்து  மின்  உற்பத்தி  நிலையம் ஒன்று  அதிக  விலைக்கு  வாங்கப்பட்டதாம்.

அதன்பின்னர்  கெந்திங்,  நஜிப்பின்  கட்டுப்பாட்டில்  இருந்த  ஒரு  அற நிறுவனத்துக்கு  நன்கொடை வழங்கியது. அப்பணம்  தேர்தல் பரப்புரைக்குப்  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“2012-இல், 1எம்டிபி கோலாலும்பூருக்கு  அருகில்  கெந்திங்  75விழுக்காடு  பங்குரிமை  கொண்டிருந்த  நிலக்கரி  மின் ஆலை ஒன்றை  வாங்கியது.

“அதற்குக்  கொடுக்கப்பட்ட விலை கிட்டதட்ட யுஎஸ்$740 மில்லியன். இது ரிம2.3 பில்லியனுக்குச்  சமம்.

“இந்தக் கொள்முதல்  நடந்து  முடிந்த  சில  மாதங்களில் கெந்திங்  பிளாண்டேசன்ஸ் பெர்ஹாட்  சுமார்  யுஎஸ்10மில்லியனை  நஜிப்புடன் தொடர்புள்ள  அற நிறுவனமொன்றுக்கு  நன்கொடையாக  வழங்கியது  என  கெந்திங்  பிளாண்டேசன்ஸ்  பேச்சாளர்  கூறினார்”, என  அச்செய்தி   கூறிற்று.

அந்த  அறநிறுவனத்தின்  பெயர்  யயாசான்  ரக்யாட்  1மலேசியா  என WSJ கூறியது.

1எம்டிபி  அந்த  மின் ஆலையில்  கெந்திங்  நிறுவனத்தின்  பங்குரிமையை  வாங்குவதற்கு   ஐந்து மடங்கு  அதிக  விலை  கொடுத்ததாக  WSJ கூறியது.

“அந்த  விற்பனையின்வழி   ரிம1.9 பில்லியன்  ஆதாயம்  கிடைத்ததாக  கெந்திங்  பின்னர்  அறிவித்தது. இதிலிருந்து  அதன் உண்மையான  பெறுமதி ரிம400 மில்லியன்தான் அதாவது  1எம்டிபி  கொடுத்த விலையில் ஐந்தில் ஒரு பங்குதான்  என்பது  புலப்படுகிறது”, என்று  அது  கூறிற்று.