WSJ செய்திக்கு பிரதமர் பதிலளித்தே ஆக வேண்டும்

kit1எம்டிபி பணம்  13வது பொதுத்  தேர்தல் பரப்புரைக்குப்  பயன்படுத்திகொள்ளப்பட்டதாகக்  கூறும்  வால்  ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி  குறித்து  பிரதமர் மெளனமாக  இருக்க  முடியாது  என்கிறார்  டிஏபி  பெருந் தலைவர்  லிம்   கிட்  சியாங்.

“அச்செய்திக்குப் பிரதமரும்  பிரதமர்  அலுவலகமும்  பதிலளிக்காமல்  இருப்பது  பிரதமரின்  நம்பகத்தன்மைக்கு மட்டுமல்ல  அனைத்துலக  அளவில்  நாட்டின்  பெயரையும்  கெடுத்து  விடும்”, என்று  கிட்  சியாங்  அறிக்கை  விடுத்துள்ளார்.

“1எம்டிபி-இன் நடவடிக்கைகளுக்குப்  பொறுப்பானவர்  என்ற  முறையிலும், பிரதமர்  மற்றும்  நிதி  அமைச்சர்  என்ற  வகையில்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி-இன்  உச்ச  அதிகாரத்தைக்  கையில்  வைத்திருப்பவர்  என்ற  முறையிலும்  நஜிப்  மெளனம்  காப்பது  உசிதமாகாது. அது  WSJ செய்தியை  ஒப்புக்கொள்வதற்கு  நிகராகும்”.

எனவே, நஜிப்  தாமாகவே  முன்வந்து பொதுக்  கணக்குக் குழுவிடம்  விளக்கமளிக்க வேண்டும் என  லிம்  கேட்டுக்கொண்டார். அதுவும் 1எம்டிபி  அதிகாரிகள் அக்குழுவின்  விசாரணைக்குச்  செல்வதற்குமுன் இதைச்  செய்ய  வேண்டும்.