கஸ்தூரி பட்டு: பிடிஎன் விவகாரத்தில் நஜிப் ஒரு கபட வேடதாரி

 

BTNnajibhypocricy1இனவாத படடைப்புகளை தயாரித்து வழங்கும் தேசிய குடியியல் பிரிவு (BTN)விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் கபட வேடம் போடுகிறார் என்று டிஎபி பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு சாடியுள்ளார்.

1மலேசியா தத்துவத்தை விடாமல் ஓதிக்கொண்டு, மிதவாதத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டு  இருக்கும் பிரதமர் நஜிப் அவரது துறையின் கீழ் இருக்கும் பிடிஎன் பற்றி மௌனம் சாதிக்கிறார் என்றார் கஸ்தூரி.

“புகழ் பெற்ற ஒரு விரல் 1மலேசியா வீரர் பிரதமர் நஜிப் மறுக்க இயலாத மிக உயர்நிலையிலான கபட வேடதாரியும், பாசாங்குக்காரரும் ஆவார். இந்தக் கடும்பகைமை எண்ணம் கொண்ட, நச்சுத்தன்மையுள்ள பிடிஎன் பிரிவு பிரதமர் இலாகாவில் அவரது கண்ணெதிரிலேயே இயங்குகிறது. இருப்பினும், அவர் அதன் நடவடிக்கைகள் தொடர்வது குறித்து இன்னும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருக்கிறார்”, என்று கஸ்தூரி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

BTNnajibhypocricy2கடந்த செவ்வாய்க்கிழமை, கஸ்தூரி மற்றும் இரு டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிடிஎன் மூடப்பட வேண்டும் என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

பிடிஎன் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த சில படைப்புகள் கசிந்து வெளியானதை பொதுமகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் சில இனவாதத் தன்மை கொண்டவைகளாக கருதப்பட்டன.

இக்கசிவு பின்னர் சரி செய்யப்பட்டு பொதுமக்களின் பார்வையிலிருந்து அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் இலாகாவின் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் பிடிஎன்-னை தற்காத்து பேசியதோடு, அது இனவாதமானது என்பதை நிருபிக்குமாறு அதன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு அவர் சவால் விட்டார்.

பிடிஎன் இனவாதமானது என்பதை அதன் படைப்புகளில் காணலாம். ஆகவே, பிடிஎன்-னின் தகுதியை ரஸாலிதான் நிருப்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி திருப்பி அடித்தார்.

“இந்த வெறுக்கத்தக்க அமைப்பை தற்காக்கும் அவர்தான் அதன் தகைமையை நிருபிக்க வேண்டும்.

“பிடிஎன்-னை அழித்து, கலைப்பதோடு மட்டுமில்லாமல், பிடிஎன்-னில் அதன் கொள்கை வகுப்பவர்கள், முடிவு எடுப்பவர்கள் மற்றும் உத்தரவு இடுபவர்கள் ஆகியோரை அவர்களின் பெயர்களோடு அம்பலப்படுத்த வேண்டும்”, என்று கோரிக்கை விடுத்த கஸ்தூரி, ரஸாலி அந்த மூளைச் சலவையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று குத்தலாகக் கூறினார்.