பாஸின் போக்கில் மாற்றம் இல்லையேல் புதிய கட்சி அமையும்

khaபாஸ்  தலைமையின்  போக்கில் 100 நாள்களில் மாற்றம்  காணப்படாவிட்டால்  கட்சியில்  உள்ள  முற்போக்குவாதிகள்  பக்கத்தான்  ரக்யாட்டுக்கு  ஆதரவாக  செயல்படும்  புதிய  கட்சி  ஒன்றை  அமைக்கக்கூடும்  என்று ஷா ஆலம்  எம்பி  காலிட்  சமட்  இன்று  எச்சரித்தார்.

பாஸ்  சிலாங்கூரின்  முன்னாள்  துணை  ஆணையரான  காலிட், பாஸ்  தலைமைக்கு  100-நாள்  கெடு  வைத்தவர் பாஸ்  உதவித் தலைவர்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா   என்றும்  அவர் சொன்னதையே  தாமும்  வழி  மொழிவதாகவும்  கூறினார்.

“புதிய  பாஸ் தலைமைத்துவத்துக்கு  காலஞ்சென்ற (பாஸ் தலைவர்கள்) பாட்சில்  நூர், நிக்  அசீஸ்  நிக்  மாட்  போன்றோரின் பாணிக்குத்  திரும்ப  அவகாசம்  கொடுப்போம்.

“ஆனால், தலைவரின்  அறிக்கைகளைப்  பார்க்கையில்  அதற்கான  அறிகுறிகள்  இல்லை”, என்றாரவர்.

100-நாள்  போதுமா  என்று  வினவியதற்கு  அந்தக்  கால  அவகாசத்தை  வழங்கியவர்  நிக்  அமார்  என்றும்  தாம்  அல்லவென்றும்  காலிட்  கூறினார்.

ரமலான் முடிவடையும்  போது  40  நாள்கள்  கடந்திருக்கும்  அதற்குள்  ஏதாவது  முன்னேற்றம்  தென்படாவிட்டால்  புதுக் கட்சி  அமைக்க முன்கூட்டியே  முடிவு  செய்யப்படலாம்  என்றும்  அவர்  சொன்னார்.