முஸ்லிம்-அல்லாத மாணவர்களை ஒளிந்துகொண்டு நீர் அருந்தச் சொல்வது அபத்தம்

hashimகெடாவில்  ஆசிரியர் ஒருவர்  முஸ்லிம்- அல்லாத  மாணவர்களிடம்  ‘ஜோக்’அடித்ததாகச்  சொல்லப்படுவதும்  வகுப்பறையில்  தண்ணீர்  அருந்தக்கூடாது  என்று  பணித்ததும்  பொருத்தமற்றவை  என தேசிய  ஆசிரியர்  பணியாளர்  சங்க(என்யுடிபி)த்  தலைவர்  ஹஷிம்  அட்னான்  கூறினார்.

ஆசிரியர்கள்  அவை  அறிந்து  நகைச்சுவையாக  பேச  வேண்டும். முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  நோன்பிருக்கவில்லை  என்பதால் எங்கும்  எப்போதும்  நீர்  அருந்தும்  உரிமை  அவர்களுக்கு  உண்டு.

“ஒவ்வோர்  ஆசிரியரும்  மற்ற  இனத்தாரை  மதிக்க  வேண்டும்.  நாம்  நகைச்சுவையாக  சொல்வதை  மற்றவர்கள்  வேறு  விதமாக  புரிந்து  கொள்ளக்  கூடும்”,என்று  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நோன்பு  மாதம்  என்பதால்  முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  ஒளிந்துகொண்டுதான்  உண்ண  வேண்டும்,  நீர்  அருந்த  வேண்டும்  என்று  எதிர்பார்ப்பது  “அபத்தமாகும்”  என்றாரவர்.

இப்படிப்பட்ட  நகைச்சுவைகள்  ஏற்கத்தக்கவை  அல்ல  என்றே   மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு  அமைச்சர்  ரொஹானி  அப்துல்  கரிமும்  இன்று  கோலாலும்பூரில்  தெரிவித்தார்.

“நீங்கள் செய்தித்தாளில்  படித்ததைத்தான்  நானும்  படித்தேன். என்னைக்  கேட்டால், இது (மாணவர்களிடம் இப்படி  வேடிக்கையாக  பேசுவது)  சரியல்ல  என்பேன்”, என்றாரவர்.