சுல்தான் சிலாங்கூரில் நிலைத்தன்மையை விரும்புகிறார்: எம்பி அதற்கு உத்தரவாதம்

mbநேற்று  சிலாங்கூர்  மாநில  ஆட்சியாளர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவுடன்  நடந்த  சந்திப்பின்போது  சுல்தான்  மாநில  நிலைத்தன்மையை  மிகவும்  வலியுறுத்தியதாக  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  தெரிவித்தார்.

சிலாங்கூர்  தொடர்ந்து  மேம்பாடு  காணவும் மாநில  அரசு  மக்களுக்கு  அதன்  பொறுப்புகளை  நிறைவேற்றவும்  அது  அவசியம்  என்றாரவர்.

சிலாங்கூரில்  பக்கத்தான்  ரக்யாட்டின்  நிலையை  சுல்தானுக்கு  விவரித்ததாக  அஸ்மின்  கூறினார்.

“மாநில  அரசு  மக்களின்  பொருளாதார  அவாக்களையும்  சமூக  நீதியையும்  நிறைவேற்றும்  முயற்சியில்  கவனம்  செலுத்த நிலைத்தன்மையுடனும்  ஒற்றுமையுடனும் இருக்கும்  என்று  நான்  உத்தரவாதமளித்தேன்”, என்றவர்  ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்.

டிஏபி-யும்  பாஸும்  உறவுகளை  முறித்துக்  கொண்டதை  அடுத்து  அனைவரது  கவனமும்  சிலாங்கூரை  நோக்கித்  திரும்பியது. சிலாங்கூரில்  அவ்விரண்டு  கட்சிகளும்  தலா  15  இடங்களை  வைத்துள்ளன. பிகேஆருக்கு 13 இடங்கள்.

ஒரு  சுயேச்சை  உறுப்பினரும்  இருக்கிறார். அவர்  முன்னாள்  மந்திரி புசார்  காலிட்  இப்ராகிம்.

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயில், சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  பக்கத்தான்  கூட்டணி  அரசில்  மாற்றமேதும்  இருக்காது  என்று  எடுத்துரைத்துள்ளார்.