நஜிப் எங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளவில்லை: 1எம்டிபி வலியுறுத்து

money1எம்டிபி-யிலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கிற்கு  பணம்  மாற்றம்  செய்யப்பட்டதில்லை  என  அந்நிறுவனம்  இன்று  ஓர் அறிக்கையில்  வலியுறுத்தியது.

1எம்டிபி-இலிருந்து  கிட்டத்தட்ட  யுஎஸ்$700 மில்லியன் நஜிப்பின்  தனிப்பட்ட வங்கிக்  கணக்குக்குச்  சென்றுள்ளதாக  வால் ஸ்திரிட்  ஜர்னல்  வெளியிட்டிருக்கும்  செய்திக்கு எதிர்வினையாக  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  அந்த  நிறுவனம் இவ்வாறு  கூறியது.

“இன்று  முன்னேரம் ஊடகங்களில் வெளிவந்த  தகவல்களின்  தொடர்பில்,  எங்கள் நிறுவனம்  பிரதமருக்குப்  பணம்  எதுவும்  கொடுத்ததில்லை  என்பதை  எம்டிபி  கூறிக்கொள்ள  விரும்புகிறது.

“இதற்கு  மாறாக, செய்திகளை  வெளியிடுவது  பொறுப்பற்ற  செயல்  என்பதுடன்  நிறுவனத்துக்கு  வேண்டுமென்றே  குழிபறிக்கும்  செயலுமாகும்”, என  எம்டிபி-இன்  அறிக்கை  கூறிற்று.

உறுதிப்படுத்தப்படாத  ஆவணங்களைப் பயன்படுத்தி  தனக்கு  எதிராக  தொடர்ந்து  ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளைச் சுமத்தப்படுவது  கண்டு  1எம்டிபி  வியப்படைகிறது.

“தலைமைக்  கணக்காய்வாளர், பொதுக் கணக்குக்  குழு(பிஏசி),  பேங்க்  நெகாரா  உள்பட சட்டப்பூர்வ  அதிகாரிகள்  மேற்கொண்டிருக்கும் விசாரணைகளில்  1எம்டிபி   ஒத்துழைத்து வருகிறது”.

அந்த விசாரணை  முடிவுகள்   தெரிவதற்கு  முன்னதாக தவறான விஷயங்களை வெளியிட வேண்டாம், அவசர முடிவுக்கு  வந்துவிட  வேண்டாம்  என்று  1எம்டிபி  கேட்டுக்கொண்டது.