சித்தி ஆயிஷா: வலைபதிவாளராக இருந்து மிக இளம்வயதில் செனட்டரானவர்

ais2008 ஆகஸ்டில் புத்தம்புது  பட்டதாரியான  சித்தி  ஆயிஷா  ஷேக்  இஸ்மாயில்  வேலையில்லாதவராக  வலைப்பதிவு  எழுதுவதில்  நேரத்தைக்  கழித்துக்  கொண்டிருந்தார்.

அவரது  வலைப்பதிவு  நாட்டமே இன்று  அவரை  ஒரு  செனட்டராக்கியுள்ளது.

இரண்டு  வாரங்களுக்குமுன்  அவர்  பினாங்கைப்  பிரதிநிதிக்கும்  செனட்டராக  பதவி  ஏற்றபோது  அவருக்கு  வயது  30. செனட்டராவதற்கு குறைந்தபட்ச  வயது  தகுதியும் 30-தான்.

வலைப்பதிவில் அவருடைய  எழுத்துகளைத் தொடர்ந்து  கவனித்த  வந்த  பிகேஆர்   மகளிர்  தலைவர்  சுரைடா  கமருடின் ஆயிஷாவை பிகேஆரில்  சேர  அழைப்பு  விடுத்தார்.

“என்  எழுத்துகள் போக  நிகழ்வுகளுக்கு  ஏற்ப நான்  நடந்து  கொண்ட விதத்தையும்  பேராக்  அரசுக்கு  அதன்  நெருக்கடியின்போதும்  நிலைத்தன்மை  குலைந்து அது தடுமாறியபோதும்  அதற்கு  நான்  உதவியாக இருந்ததையும்  கவனித்து  வந்திருக்கிறார்  அவர்”,  என்றார்  ஆயிஷா.

2009-இல்  ஆயிஷா பிகேஆரின்  ஸ்ரீ கண்டி இயக்கத்தின் தலைவரானார். ஸ்ரீ கண்டி  என்பது  அம்னோவின்  புத்ரி  பிரிவைப்  போன்றது. 35-வயதுக்குக்  குறைவானவர்களுக்காக  உள்ள பிரிவு  அது.

நிஜார்  ஜமாலுடின்  பேராக்  மந்திரி  புசாராக  இருந்தபோது  2009-இலிருந்து 2011வரை  அவரின்  ஊடக  அதிகாரியாக  பணியாற்றினார்  ஆயிஷா.

இன்றைய  நிலையில்  மேலவையில்  உள்ள  வயது  குறைந்த  செனட்டர்  ஆயிஷாதான்.

எத்தனையோ  மூத்தவர்கள்  இருக்கையில் தான்  செனட்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டது  அதிர்ச்சியாக  இருந்தது  அவருக்கு.

“பிகேஆர்  இளைஞர்களை  ஆதரிக்கும்  கட்சி  என்பதைக்  காண்பிக்கவே  நான்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  வான்  அசிசா  கூறினார்”, என்று  அயிஷா  தெரிவித்தார்.   இளைஞர்களுக்குக்  கட்சியில் மட்டுமல்லாமல்  கட்சிக்கு  வெளியிலும்  பதவி  கொடுப்பதை விரும்புகிறதாம் பிகேஆர்.

“செனட்டில்  இளைஞர்களின்  குரலும்  ஒலிக்க  வேண்டும்  என  அவர்கள் (கட்சி)  விரும்புகிறார்கள்”, என்றாரவர்.