ஜொகூர் டிஎபி கூட்டத்தில் குண்டர்கள் தாக்குதல்

 

Thugs-DAPஜொகூர், மாசாய்யிலுள்ள ஒரு கோப்பிக் கடையில் நடந்த ஒரு டிஎபி நிகழ்ச்சியில் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை பேச விடாமல் தடுக்க முயன்றனர்.

நிகழ்ச்சி பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய சிறிது நேரத்தில் 50 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தினர் அந்த இடத்தில் புகுந்து பிளாஸ்டிக் குவளைகளையும், மங்குகளையும், ஒரு கூட்டுமாறையும் கூட அவர்கள் கிட் சியாங்ஙை நோக்கி வீசினர்.

அங்கிருந்தவர்கள் கிட் சியாங்ஙை சுற்றி ஒரு பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்தினர். லிம்முக்கு எந்த காயமும் ஏற்படவில்லஙென்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.

“பாலிக் கிட் சியாங்”, “பாபி”, “கம்யூனிஸ்ட் அனுதாபி” மற்றும் “மாம்புஸ்” என்று அக்கூட்டத்தினர் கத்தினர் என்று இவற்றை கேட்ட ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ்காரர்கள் அங்கிருந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் இயலவில்லை.

சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்த இக்கூட்டத்தினரின் அட்டகாசம் அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கிட் சியாஙை அங்கிருந்து அழைத்துச் சென்ற பின்னர் அடங்கியது.

மந்திரி புசார் பொறுப்பேற்க வேண்டும்

இச்சம்பவம் தொடங்கிய போது அக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சிங் தோங் தாக்குதல் நடத்திய Thugs-DAP1கும்பலில் பாசிர் கூடாங் அம்னோ தொகுதி உறுப்பினர்கள் இருந்ததை தாம் அடையாளம் கண்டதாக கூறினார்.

அவர்கள் நாற்காலிகளை உடைத்தனர், தண்ணீர் போத்தல்களையும் மங்குகளையும் வீசினர் என்று கூறிய லியு, இதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதற்காக தாமான் மேகா ரியா மசூதியில் கூடுமாறு டெக்ஸ்ட் செய்திகள் அனுப்பப்பட்டிருப்பதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார்.

அங்கிருந்த போலீசார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மேற்கொண்ட நடவடிக்கையை லியு பாராட்டினார்.

இச்சம்பவத்திற்கு ஜொகூர் மந்திரி புசாரும், பாசிர் கூடாங் அம்னோ தலைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று லியு வலியுறுத்தினார்.

இது குறித்து போலீஸ் புகார் செய்யப் போவதாகவும், ஜொகூர் போலீஸ் தலைவர் இத்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் லியு கூறினார்.