WSJ செய்தி கணக்காய்வுத் துறை அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டதல்ல

audஅண்மைய  வால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ)  செய்திகள்  தனது  இடைக்கால கணக்காய்வு  அறிக்கையை  அடிப்படையாகக்  கொண்டவை  அல்ல  என்று  தேசிய  கணக்காய்வுத்  துறை கூறியுள்ளது.

“WSJ செய்திக்கும் 1எம்டிபி  இடைக்கால கணக்காய்வு  அறிக்கைக்கும்  தொடர்பில்லை. தேசிய  கணக்காய்வுத்  துறையிலிருந்து  WSJ-க்கு  எந்தவொரு  செய்தியும்  சென்றதில்லை”, என  அத்துறையின்  ஆய்வுப்  பிரிவு  துணை  இயக்குனர்  மசியா  அஹ்மட்  மலேசியாகினிக்கு  மின்னஞ்சலில்  அனுப்பிய  பதிலில்  கூறினார்.

1எம்டிபி-இன்  யுஎஸ்$700 மில்லியன்  நஜிப்பின்  சொந்த  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருப்பது  மலேசிய  விசாரணையாளர்களின்  ஆவணங்களிலிருந்து  தெரிய  வந்திருப்பதாக  WSJ  கடந்த  வாரம்  செய்தி  வெளியிட்டிருந்தது.

நஜிப்  அதை  மறுத்தார். WSJ அந்தச்  செய்தி  உண்மையானது  என்கிறது.

1எம்டிபி-இல் முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாக  பரவலாகக்  கூறப்பட்டதைத்  தொடர்ந்து  அந்நிறுவனத்தின்  கணக்குவழக்குகளை  ஆராயுமாறு  கணக்காய்வுத்  துறையை  நஜிப்  பணித்தார்.

கணக்காய்வுத்  துறையின்  இடைக்கால  அறிக்கை  வியாழக்கிழமை  பொது  கணக்குக் குழுவிடம்  கொடுக்கப்படும்  எனத்  தெரிகிறது. ஆனால்,  அது பொதுமக்களின்  பார்வைக்கு  வருவது  சந்தேகமே.