பிரதிநிதிகளை நீக்கிய பினாங்கு அரசுக்கு எதிராக பாஸ் வழக்கு தொடுக்கும்

repஊராட்சி  மன்றங்களிலிருந்த  தனது  பிரதிநிதிகளைப்  பணிநீக்கம்  செய்த  டிஏபி-ஆல்  வழிநடத்தப்படும்  பினாங்கு  அரசுக்கெதிராக  பாஸ்  சட்ட  நடவடிக்கை  எடுக்கும்.

பணிநீக்கம்  செய்யப்பட்ட  பிரதிநிதிகளின்  உரிமைகளைப்  பாதுகாக்கவும் அவர்களின்  கொளரவத்தை  நிலைநிறுத்தவும்  கோரி  கடிதம்  எழுதுமாறு  பாஸ்  அதன்  வழக்குரைஞர்களைப்  பணித்திருப்பதாக அக்கட்சியின்  மாநில  ஆணையர்  பவுஸி  முகம்மட்  யூசுப்  கூறினார்.

பினாங்கு  இஸ்லாமிய  விவகார  மன்றத்  தலைவராகவுள்ள  சாலே  மான்  தவிர்த்து,  மாநில  அரசு  நிர்வாகம்  மற்றும்  ஊராட்சி  மன்றங்களில் பதவி  வகித்த பாஸ்  பிரதிநிதிகள்  அனைவரையும்  மாநில அரசு  நீக்கியுள்ளது.

“பணிநீக்கம்  நிலை  ஆணைகளின்படி  நடந்திருந்தால்  பிரச்னை  இல்லை. ஆனால், மனம்  போன  போக்கில்  செய்யப்பட்டிருக்கிறது”, என்றவர்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.

“மாநிலத்தை இரண்டு  தவணைகள்தான்  ஆண்டார்கள். எல்லாமே  ஒழுங்கற்றுக்  கிடக்கிறது. இது  டிஏபி நல்ல நிர்வாகியாக  இருக்கத்  தவறிவிட்டது  என்பதைக்  காண்பிக்கிறது”, என்றாரவர்.