1எம்டிபி பணம் கையாடப்பட்டதாகக் கூறப்படுவதை விசாரிக்கும் சிறப்புப் பணிக்குழு அவ்விவகாரத்தில் தொடர்புடைய ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
“இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று நம்பப்படுவோருக்குச் சொந்தமான ஆறு வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைக்க ஜூலை 6-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது”, எனப் பணிக்குழு இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
அந்த அறிக்கையில் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்டார் அசிஸ், அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அபு காசிம் முகமது ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
முடக்கப்பட்டவை பிரதமருடைய கணக்குகளா என்பதை அவ்வறிக்கை குறிப்பிடவில்லை.
இரண்டு வங்கிகளிடமிருந்து ஆவணங்களைப் பெற்றிருப்பதாகவும் அது தெரிவித்தது. வங்கிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
பிரதமர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக பணிக்குழு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இன்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
“விசாரணைக்கு உதவியாக இரண்டு வங்கிகளிடமிருந்து 17 வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சிறப்புப் பணிக்குழுவுக்குக் கிடைத்துள்ளன”, என்று அது கூறிற்று.

























