ஐஜிபி: எம்பேங் நிறுவனர் கொலைக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பு இல்லை

ambankஎம்பேங்க் நிறுவனர் ஹுசேன் அஹ்மாட் நஜாடி  1எம்டிபி  ஊழலை  அம்பலப்படுத்த  விரும்பினார்  அதானல்தான கொல்லப்பட்டார்  என்ற  வதந்திகளைப்  போலீசார்  நிராகரித்தனர்.

அக்கொலைக்கும் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதற்கும்  சம்பந்தம் இல்லை என தேசிய  போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.

“ஹுசேன்  கொலை செய்யப்படுவதற்கு முன், எந்த புகாரையும்  செய்யவில்லை”, என்றாரவர்.

கேஎல்  செண்ட்ரலில்  செய்தியாளர்களிடம்  பேசிய  காலிட்,  கொலைக்கான  நோக்கம்  போலீசுக்கு  ஏற்கனவே  தெரியும்  என்றார். கொலைகாரனும்  பிடிக்கப்பட்டு  கடந்த  ஆண்டு  தண்டிக்கப்பட்டான்.

இப்போது  ஒரு  வலைப்பதிவு புதிதாக  ஒரு  வதந்தியைக்  கிளப்பி   விட்டிருக்கிறது.அதைப் படித்துவிட்டு  ஹுசேனின்  மகனும்  அதையே  கூறத்  தொடங்கியிருக்கிறார்  என்றாரவர்.

போலீசார் அந்த  வதந்தியின்  மூலத்தைக்  கண்டுபிடிக்க  முயன்று  வருகிறார்கள். தப்பான  செய்திகளைப்  பரப்புவோருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனவும்  காலிட்  கூறினார்.