உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் நஜிப் உரையாற்றப் போகிறார்

 

Internation anti-corruption conferenceஅரசு நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்) கையாடல் மோசடி குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக எழுந்துள்ள வேளையில், பிரதமர் நஜிப் ரசாக் ஓர் உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 2 லிருந்து 4 வரையில் புத்ரா ஜெயாவில் நடைபெறவிருக்கும் 16 ஆவது அனைத்துலக இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் (ஐஎசிசி) உரையாற்றவிருக்கும் முக்கியமான நபர்களில் நஜிப்பும் ஒருவராக இருக்கிறார்.

“தண்டனையிலிருந்து விதிவிலக்களித்தல் நிறுத்தப்படுதல்: மக்கள், நேர்மை, செய்கை” என்ற கருப்பொருளைக் கொண்ட அம்மாநாட்டில் சுமார் 800 அனைத்துலக பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு இலஞ்சத்திற்கு தண்டனையிலிருந்து விதிவிலக்களிக்கப்படுவதை நிறுத்துவது பற்றி விவாதங்களையும் பட்டறைகளையும் நடத்தவிருக்கின்றனர்.

உலக அளவில் பெரும் சவாலாக வளர்ந்து வரும் இலஞ்சத்தை கையாள்வதற்கான வழிமுறைகளைக் காண்பதற்காக கூட்டப்படும் இம்மாநாட்டில் அரசாங்கத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தனியார்துறை மற்றும் பல தரப்பினர் பங்கேற்பர் என்று ஐஎசிசி கூறுகிறது.

இம்மாநாட்டில் உரையாற்றவிருக்கும் இதர மலேசியர்களில் துணைப் பிரதமர் முகைதின் யாசின், பிரதமர்துறை நேர்மை அமைச்சர் பால் லவ், மலேசிய இலஞ்ச எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் அபு காசிம் முகமட் மற்றும் டிராஸ்பேரன்சி இன்டர்நேசனல் மலேசியா தலைவர் அக்பர் சதார் ஆகியோரும் அடங்குவர்.