1எம்டிபி விசாரணைக் குழுவிலிருந்து ஐஜிபி விலக வேண்டும்

mafuவிசாரணை  பாரபட்சமின்றி  நடக்க  வேண்டும். அதற்கு 1எம்டிபி  ஊழலைப்  புலனாய்வு  செய்யும்  சிறப்புப் பணிக்குழுவிலிருந்து  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  விலக  வேண்டும்  என்று  வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அனுமதியில்லாமல்  தகவலைப் பெற்றதற்காக  வால்  ஸ்திரிட்  ஜர்னலுக்கு (WSJ) எதிராக  விசாரணை  நடத்த  வேண்டும்  என  ஐஜிபி  கோரிக்கை  விடுத்திருப்பதால்  அவர்  அக்குழுவில்  இருப்பது  சரியல்ல  என்று  பாஸ்  பொக்கோட்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  கூறினார்.

“தகவலை  வெளியிட்டவர்  யார்  என்பதையும்  WSJ-க்குத்  தகவல்  எப்படிக்  கிடைத்தது  என்பதையும்  போலீஸ் விசாரிக்கும்  என்ற  ஐஜிபி-இன்  அறிக்கை, நாட்டின் நற்பெயரை  மீட்டெடுக்க  உதவப்  போவதில்லை”, என பாஸின்  அதிகாரத்துவ  முகநூல் பக்கத்தில்  மாபுஸ் குறிப்பிட்டிருந்தார்.

“நாட்டினதும்  மக்களினதும்  நலனைக் காக்க  வேண்டிய  போலீஸ்,  தலைவர்கள்  இழைத்ததாகக்  கூறப்படும்  குற்றச்செயல்களைப்  பாதுகாக்க  முற்படுவதுபோல்  காணப்படுவதால், ஐஜிபி-இன்  செயல்  நாட்டின்  பெயரை மேலும்  மோசமாக்கி  மலேசியாவின்மீது  உலக  நாடுகள்  கொண்டுள்ள அவநம்பிக்கை  மேலோங்க வகை  செய்திடும்”, என்றவர்  சொன்னார்.